தம்பியை கொன்றதாக கைதான அண்ணன் சேலம் மத்திய சிறையில் அடைப்பு

ஓசூர் அருகே சொத்து தகராறில் தம்பியை கொன்றதாக கைதான அண்ணன் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சேலம் மத்திய சிறை
சேலம் மத்திய சிறை
Published on

ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள அத்திமுகம் பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது 27). இவரது தம்பி சக்திவேல் (18). கூலித்தொழிலாளியான இவர்களுக்கு இடையே, சொத்து தகராறு இருந்து வந்தது. மாரசந்திரம் கிராமத்திற்கு சென்று, அங்குள்ள டாஸ்மாக்கில் மது வாங்கி இருவரும் ஒன்றாக குடித்தனர். அப்போது சக்திவேலுவுக்கும், ஜெயபிரகாசுக்கும் இடையே மீண்டும் சொத்து குறித்து தகராறு ஏற்பட்டது. கடும் வாக்குவாதம் முற்றிய நிலையில், ஒருவரை ஒருவர் ஆவேசமாக தாக்கி கொண்டனர்.

அப்போது, போதை தலைக்கேறியதால் ஆத்திரமடைந்த ஜெயபிரகாஷ், அருகில் இருந்த கத்தியை எடுத்து தம்பி என்றும் பார்க்காமல் சக்திவேலை சரமாரியாக குத்தினார். இதில் சக்திவேல் ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார். சக்திவேல் உயிரிழந்ததை அறிந்த ஜெயபிரகாஷ் தலைமறைவானார்.

இதைத்தொடர்ந்து, அங்கு இருந்தவர்கள் சம்பவம் குறித்து அட்கோ போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் அங்கு வந்த போலீசார், சக்திவேல் சடலத்தை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தலைமறைவாக இருந்த ஜெயபிரகாசை நேற்று போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com