கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையின் பிரதான முதல் மதகு கடந்த 29-ந்தேதி உடைந்தது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அதிர்ச்சி அடைந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடைந்த முதல் மதகை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் சென்னை தலைமை பொதுப்பணித்துறையில் இருந்து உயர் மட்ட வல்லுநர் குழு வந்து முதல் மதகை ஆய்வு செய்தது.
பின்னர் உயர் மட்ட வல்லுநர் குழுவினர், அணையின் நீர்மட்டத்தை 32 அடியாக குறைத்தால் மட்டுமே முதல் மதகு ஷட்டரை சரி செய்ய முடியும் என்றனர்.
இதையடுத்து அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டது. நீர்மட்டம் 32 அடியாக குறைந்ததை அடுத்து மதகின் ஷட்டரை வெட்டி எடுக்கும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த பணியில் 25-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சுழற்சி முறையில் இரவு பகலாக ஈடுபட்டு வருகிறார்கள்.
நேற்று 2-வது நாளாக பணி நடந்தது. மதகின் ஷட்டரை கொஞ்சம், கொஞ்சமாக தொழிலாளர்கள் வெல்டிங் வைத்து வெட்டினார்கள். இந்த ஷட்டர் பல டன் எடை கொண்டது என தெரிகிறது.
இன்று 3-வது நாளாக மதகை சீரமைக்கும் பணி தொடங்கியது. முன்னதாக பொதுப்பணித்துறை நீர்வள என்ஜினீயர்கள் மதகை எவ்வாறு? சீரமைக்க வேண்டும் என டெக்னீசியன் ஊழியர்களுக்கும், தொழிலா ளர்களுக்கும் ஆலோசனைகள் வழங்கினர்.
மேலும் என்ஜினீயர்கள் தலைமையில் டெக்னீசியன் ஊழியர்கள், தொழிலாளர்கள் மதகை சீரமைத்து வருகிறார்கள். இப்பணி இன்னும் 2 நாட்களில் முடிவடைந்து விடும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இது குறித்து கிருஷ்ணகிரி அணை உதவி செயற்பொறியாளர் சாம்ராஜ் தெரிவிக்கையில்,
ஓரிரு நாளில் உடைந்த முதல் மதகு முழுமையாக அகற்றப்படும். இதற்காக தொழிலாளர்கள் இரவு, பகலாக பணிகளை மேற்கு கொண்டு வருகின்றனர் என்றார்.
அணையில் இருந்து 2 சிறிய மதகுகள் வலது மற்றும் இடது புற பாசன கால்வாய் மூலம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 7 நாட்களுக்கு பின் அணைக்குள் சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் அனுமதிக்கப்பட்டனர்.
முதல் மதகை சரி செய்வதற்காக அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் மீன்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன.
பொதுமக்கள் இந்த மீன்களை பிடித்து விற்பனை செய்து வருகிறார்கள். ஒரு கிலோ மீன் 30 ரூபாயில் இருந்து 100 ரூபாய் வரை விற்பனை ஆனது.
மீன்களை வாங்க சுற்றுவட்டார பகுதியில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குவிந்தனர். நேற்று 1½ டன் அளவிற்கு மீன்கள் விற்பனையானது. இதை விட இன்று அதிகமாக மீன்கள் விற்பனையானதாக மீனவர்கள் கூறினர்.