பிரிட்டன் மன்னிப்பு கேட்க வேண்டும் - ரஷியா வலியுறுத்தல்

முன்னாள் உளவாளியை நாங்கள் கொல்ல முயன்றதாக கூறுவதை நிரூபிக்காவிட்டால் பிரிட்டன் அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என ரஷிய அதிபர் மாளிகை இன்று எச்சரித்துள்ளது. #Britain #Kremlin
பிரிட்டன் மன்னிப்பு கேட்க வேண்டும் - ரஷியா வலியுறுத்தல்
Published on

மாஸ்கோ:

ரஷிய நாட்டின் ராணுவத்துறை உளவுப்பிரிவில் உயரதிகாரியாக பணியாற்றியவர் செர்ஜய் ஸ்கிர்பால் (வயது 66). சில ரஷிய உளவாளிகளை இங்கிலாந்து உளவுத்துறையினரிடம் காட்டி கொடுத்தமைக்காக கடந்த 2004-ம் ஆண்டு மாஸ்கோவில் இவர் கைது செய்யப்பட்டார். 13 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அவரை 2010-ம் ஆண்டு பிரிட்டன் அரசு மீட்டு அடைக்கலம் கொடுத்தது.

தற்போது பிரிட்டனில் வசித்து வரும் ஸ்கிர்பால், கடந்த 4-ந் தேதி சாலிஸ்பரி நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்துக்கு வெளியே தனது மகள் யூலியாவுடன் (33) மயங்கிய நிலையில் கிடந்தார். அவர்களது உடலில் மிகவும் கொடூரமான ‘மர்ம விஷம்’ ஏறியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இருவரும் மருத்துவமனையில் கவலைக்கிடமான முறையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் பிரிட்டனுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் தெரசா மே தேசிய பாதுகாப்பு கவுன்சிலை கூட்டி ஆலோசனை நடத்தினார். இந்த விவகாரம் தொடர்பாக ரஷியா தனது விளக்கத்தை அளிக்க வேண்டும் என பிரிட்டன் கோரியது. அமெரிக்க அதிபர் டிரம்பும் இவ்விவகாரத்தில் பிரிட்டனுக்கு ஆதரவாக உள்ளார்.

ஆனால், பிரிட்டனின் குற்றச்சாட்டுகளை மறுத்த ரஷியா, இது தொடர்பாக எந்த விளக்கத்தையும் தரவில்லை. இதனால், ஸ்கிர்பால் மற்றும் அவரது மகளுக்கு விஷம் ஏற்றப்பட்டதற்கு ரஷியாவே பொறுப்பு என பிரிட்டன் உறுதியாக தெரிவித்தது.

இந்நிலையில், பாராளுமன்றத்தில் பேசிய பிரதமர் தெரசா மே, ஸ்கிர்பால் மற்றும் அவரது மகளுக்கு விஷம் ஏற்றப்பட்டதற்கு ரஷிய அரசுதான் கொலைமுயற்சி குற்றவாளியாக அறிவித்தார்.

ரஷியா உடனான உயர்மட்ட தொடர்பை துண்டிக்க வேண்டும் என்ற பாதுகாப்பு கவுன்சிலின் பரிந்துரையை நான் ஏற்கிறேன். ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி செர்கெய் லாவ்ராவ் பிரிட்டன் வருவதற்கு விடுக்கப்பட்ட அழைப்பையும் திரும்ப பெறுகிறோம் என தெரசா மே கூறினார்.

பிரிட்டனில் உள்ள ரஷியா நாட்டு தூதரக அதிகாரிகள் 23 பேரையும் நாட்டை விட்டு வெளியேறுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் முதல்முறையாக தங்கள நாட்டு வீதியில் விஷ ரசாயனத் தாக்குதல் நடத்தி முன்னாள் உளவாளியை கொல்ல முயன்றதாக புதின் மீது பிரிட்டன் நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி போரிஸ் ஜான்சன் குற்றம்சாட்டினார்.

ஒட்டுமொத்தமாக ரஷியா மக்கள் மீது எங்களுக்கு எவ்வித குரோதமும் இல்லை. ஆனால், எங்களது வாக்குவாதம் எல்லாம் கிரெம்ளின் மாளிகை மற்றும் ரஷிய அதிபர் புதின் தொடர்பானதுதான். அவரது ஏகோபித்த முடிவின்படிதான், ஐரோப்பா கண்டத்திலும், பிரிட்டன் நாட்டு வீதியிலும், இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் முதன்முறையாக ரசாயனத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என அவர் நேரடியாக குற்றம்சாட்டினார். இது மூடத்தனமான கருத்து என்று புதின் மறுப்பு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், முன்னாள் உளவாளியை நாங்கள் கொல்ல முயன்றதாக கூறுவதை நிரூபிக்காவிட்டால் பிரிட்டன் அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என ரஷிய அதிபர் மாளிகை இன்று தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, மாஸ்கோவில் உள்ள கிரெம்ளின் மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிபர் விளாடிமிர் புதினின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், ‘பிரிட்டன் அரசு சுமத்தியுள்ள ஆதாரமற்ற இந்த குற்றச்சாட்டுக்கு தகுந்த ஆதாரங்களுடன் அவர்கள் பதில் அளித்தே தீர வேண்டும். அல்லது மன்னிப்பு கேட்டாக வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். #Tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com