

திருமங்கலம்:
திருமங்கலம் அருகே உள்ள கல்லணை கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் சுடலைமுத்து. இவரது மகன் ஜெயக்குமார்(வயது 25). இவர் போஸ்ட் மேன் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் திருப்புவனம் பாரமலை மகள் காளீஸ்வரி(23) என்பவருக்கும் கடந்த 17 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்தநிலையில் ஜெயக்குமாரின் பாட்டிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு விபத்து ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜெயக்குமாரின் தாய் மாமாவிற்கும் விபத்து ஏற்பட்டு அவரும் சிகிச்சையில் உள்ளார். தொடர்ந்து ஜெயக்குமாரின் குடும்பத்திற்கு பல்வேறு இன்னல்கள் வந்ததால் அவரது உறவினர்கள் திருமணமான பெண் ராசி இல்லாதவர் என பேசினர்.
தன்னை ராசி இல்லாதவள் என உறவினர்கள் கூறியதால் மனவேதனை அடைந்த காளீஸ்வரி, வீட்டில் யாரும் இல்லாதபோது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியில் காளீஸ்வரி இறந்தார். இதுகுறித்து கூடகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.