பொள்ளாச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகள் கொள்ளை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் அவர்களை தேடி வருகிறார்கள்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

பொள்ளாச்சி:

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஊஞ்சவேலாம்பட்டி சிவராம் நகரை சேர்ந்தவர் பால்ராஜ்(வயது 41). இவரது தம்பிக்கு சந்திராபுரம் பகுதியில் புதிய வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அங்கு நேற்று முன்தினம் காலையில் கான்கீரிட் அமைக்கும் பணி நடைபெற்றது. இதனால் பால்ராஜ் தனது மனைவி மற்றும் மகனுடன் சந்திராபுரத்திற்கு சென்றார். பின்னர் அவர்கள் இரவு வீட்டிற்கு திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் முன் பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பால்ராஜ் உடனே வீட்டிற்குள் சென்று பார்த்தார். அப்போது பீரோவில் இருந்த துணி உள்ளிட்ட பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த 15 பவுன் நகைகள் கொள்ளைபோனது தெரியவந்தது. 

இதுகுறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிந்திருந்த கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. 

இதுகுறித்து பால்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து, கொள்ளையில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com