

இரணியல்:
இரணியல் ஆழ்வார் கோவில் பகுதியை சேர்ந்தவர் பத்மாபிள்ளை. இவர் குடும்பத்துடன் 2 நாட்களுக்கு முன்பு மத்திய பிரதேசத்தில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றார். இதனால் வீட்டை கவனித்து கொள்ள பக்கத்தில் குடியிருந்த உறவினரிடம் கூறியிருந்தார்.
எனவே உறவினர் நேற்று பத்மாபிள்ளை வீட்டுக்கு சென்றார். அங்கு வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவும் திறந்து கிடந்தது. அதில் இருந்த பொருள்கள் வீடு முழுவதும் சிதறிகிடந்தன. அதிர்ச்சி அடைந்த அவர் இது பற்றி பத்மபிள்ளைக்கு தகவல் கொடுத்தார். அவர் உடனே இது பற்றி போலீசில் புகார் செய்யும்படி அறிவுறுத்தினார்.
அதன்படி பத்மாபிள்ளையின் உறவினர் இரணியல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பேபிதங்கம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கோபி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் வீட்டுக்குள் சோதனை நடத்தியபோது 2 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம், வெள்ளி தட்டு, ஸ்பூன்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது.
தொடர்ந்து கைரேகை நிபுணர்களும் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கொள்ளையர்கள் உடைத்த கதவு பகுதியில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews