காரிமங்கலம் அருகே மரக்கிளையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்த விவசாயி

காரிமங்கலம் அருகே மரக்கிளையில் தூக்கில் தொங்கிய நிலையில் விவசாயி பிணமாக கிடந்தார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.
விவசாயி சின்னசாமி தூக்கில் தொங்கிய நிலையில் உள்ள காட்சி.
விவசாயி சின்னசாமி தூக்கில் தொங்கிய நிலையில் உள்ள காட்சி.
Published on

காரிமங்கலம்:

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே திண்டல் மேல்சோளுபட்டி பகுதியில் உள்ள சாலி கொட்டாயைச் சேர்ந்தவர் அழகன் என்கிற சின்னசாமி (வயது 55). விவசாயி. இவருக்கு 3 மகள்கள், ஒரு மகனும் உள்ளனர். இதில் அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

3 மகள்களில் கடைசி மகளான சாலம்மாள் என்பவருக்கும், மேல்சோளுபட்டியைச் சேர்ந்த பழனி-கலாமணி தம்பதியினரின் மகன் அருள் என்பவருக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. சாலம்மாள் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனது தந்தை சின்னசாமி வீட்டிற்கு சென்று விட்டார்.

இது தொடர்பாக அருள் தனது மனைவியை குடும்ப நடத்த அழைத்து வர சென்றபோது இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அருள் குடும்பத்தினர் சாலம்மாளின் தந்தை சின்னசாமியை தாக்கியதாக தெரிகிறது. இதில் சின்னசாமிக்கு கையில் முறிவு ஏற்பட்டது. உடனே அவர் ஆஸ்பத்திரிக்கு சென்று கட்டு போட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சின்னசாமி காரிமங்கலம் போலீசில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தனர்.

நேற்று ஊர்பெரியவர்கள் முன்னிலையில் சின்னசாமி தனது மகளுக்கு விவகாரத்து வாங்கி கொடுங்கள் என்று கேட்டு உள்ளார். அப்போது அவர்கள், சின்னசாமியிடம் சமாதானம் பேசி திருப்பி அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் இன்று அதே பகுதியில் மாரியம்மன் கோவில் அருகே உள்ள 20 அடி உயரமுள்ள மரக்கிளையில் சின்னசாமி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த சின்னசாமியின் உறவினர்கள் உடனே அங்கு வந்து அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து காரிமங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார், டி.எஸ்.பி. சீனிவாசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.

பின்னர் போலீசார் மரத்தில் கிடந்த சின்னசாமியின் உடலை மீட்டு கீழே கொண்டு வந்தனர். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து உறவினர்கள் போலீசாரிடம், சின்னசாமி கையில் முறிவு ஏற்பட்டு கட்டுபோட்டுள்ளதால் அவரால் 20 அடி உயரமுள்ள மர கிளையில் எப்படி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொள்ள முடியும்?  ஏற்கனவே சின்னசாமி, தன்னை தாக்கியதாக மருமகன் அருள் மற்றும் அவரது குடும்பத்தார் மீது போலீசில் புகார் தெரிவித்துள்ளார். அந்த வழக்கை போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் தற்போது, சின்னசாமி இறந்துள்ளதால் அவரது சாவில் சந்தேகம் எழுந்துள்ளது என்று கூறி புகார் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com