பேஸ்புக்கில் அறிமுகம் - காதலியை கத்தியால் குத்தி காதலன் தற்கொலை

காட்பாடி அருகே காதலியை கத்தியால் குத்திய காதலன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

வாலாஜா:

வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 27 வயது இளம்பெண். இவருக்கும் திருநெல்வேலியை சேர்ந்த விஜய்சங்கருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து 2 பேரும் சந்திக்க திட்டமிட்டனர். இதன்படி, விஜய்சங்கர் கடந்த ஒரு மாதத்திற்கு முன் காட்பாடி அருகே உள்ள அம்முண்டி கிராமத்துக்கு வந்தார்.

பின்னர் விஜய்சங்கர் அதே பகுதியில் தங்கினார். இதனால், இருவரும் அடிக்கடி சந்தித்தனர் நேற்று முன்தினம் இரவு விஜய்சங்கரின் அறையில் இருவரும் தனியாக இருந்தனர்.

அப்போது திடீரென அவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நள்ளிரவு வரை நீடித்த தகராறில் ஆத்திரமடைந்த விஜய்சங்கர் அதிகாலை 2 மணியளவில் இளம்பெண்ணை கத்தியால் சரமாரியாக வெட்டினார். இதில் அலறித் துடித்த இளம்பெண், அவரிடம் இருந்து தப்பித்து கதவை திறந்து வந்து வெளியில் தாழ்ப்பாள் போட்டார்.

பின்னர் செல்போனில் தனது அண்ணனுக்கு தகவல் கொடுத்தார். இதை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த அவர், அம்முண்டி கிராமத்துக்கு காரில் சென்றார். அங்கு படுகாயத்துடன் இருந்த சகோதரியை காப்பாற்றி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்.

காட்பாடி வரும்போது வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த இன்ஸ்பெக்டர் புகழ், காரை மறித்து விசாரித்தபோது நடந்த சம்பவம் தெரிய வந்தது. உடனே, திருவலம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்து போலீசாரை அம்முண்டிக்கு அனுப்பிவைத்தார்.

போலீசாரும் விரைந்து சென்று விஜய்சங்கர் வீட்டுக்கதவை திறந்து பார்த்தனர். அங்கு அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

அவரது உடலை கைப்பற்றி வேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com