

அவனியாபுரம்:
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா பெருங்குடி கணேசபுரத்தை சேர்ந்தவர் விருமாண்டி. இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். நேற்று மாலை தனது மகன் பிரமோத் (வயது 9) உடன் பெருங்குடி அருகே உள்ள அய்வைத்தனேந்தல் கண்மாயில் குளிக்க சென்றார்.
விருமாண்டி குடிபோதையில் இருந்ததால் கரையில் உட்கார்ந்து கொண்டார். மகன் மட்டும் கண்மாயில் இறங்கி குளித்தான். அப்போது எதிர்பாராத விதமாக பிரமோத் ஆழமான பகுதியில் சிக்கி கொண்டான். தண்ணீரில் மூழ்கி தத்தளித்தபடி அப்பா என்னை காப்பாற்றுங்கள் என்று அபய குரல் எழுப்பினான்.
விருமாண்டி போதையில் இருந்ததால் அவருக்கு மகனின் கூக்குரல் எதுவும் கேட்கவில்லை. சிறுவன் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தை சேர்ந்தவர்கள் அங்கு விரைந்து வந்து சிறுவனை காப்பாற்ற முயன்றனர். ஆனாலும் பிரமோத் நீரில் மூழ்கி மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தான்.
இது குறித்து உடனடியாக அவனியாபுரம் காவல் நிலையம், மதுரை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன் மற்றும் மீட்பு படையினர் கண்மாய்க்கு வந்து 2 மணி நேரமாக தேடி சிறுவன் உடலை மீட்டனர். சிறுவன் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். தந்தையின் குடிபோதையால் மகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. பலியான சிறுவன் பிரமோத் அங்குள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.