சென்னையின் தண்ணீர் தேவையை சமாளிக்க 20 ஆழ்துளை கிணறுகள்

சென்னையில் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க 20 ஆழ்துளை கிணறுகளை அமைக்க குடிநீர் வாரியம் முடிவு செய்துள்ளது.
சென்னையின் தண்ணீர் தேவையை சமாளிக்க 20 ஆழ்துளை கிணறுகள்
Published on

சென்னை:

சென்னைக்கு குடிநீர் வழங்க கூடிய 4 ஏரிகளும் வறண்டு விட்டதால் குவாரிகளில் இருந்து தண்ணீர் எடுக்கப்படுகிறது. சென்னை வீடுகளுக்கு தினமும் 870 மில்லியன் கன அடி தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் ஆறு, ஏரிகள் எல்லாம் வற்றி விட்டதால் தேவையான அளவு குடிநீர் சப்ளை செய்ய முடிவதில்லை.

வீராணம் ஏரியில் இருந்து கிடைத்த தண்ணீரும் நின்று விட்டதால் குடிநீர் தேவையை சமாளிக்க ஆழ்துளை கிணறுகள், கல்குவாரிகள், நெய்வேலி சுரங்க நீர், கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் ஆகியவற்றின் மூலம் கிடைக்கும் 470 மில்லியன் லிட்டர் குடிநீர் தற்போது வினியோகிக்கப்பட்டு வருகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விவசாய கிணறுகளில் இருந்து 130 மில்லியன் லிட்டர், நெய்வேலி சுரங்கத்தில் இருந்து 105 மில்லியன் லிட்டர், மீஞ்சூர், நெமிலி குடிநீர் திட்டத்தில் இருந்து தலா 100 மில்லியன் லிட்டர் எடுக்கப்பட்டு வழங்கப்படுகிறது. இது தவிர கல்குவாரிகளில் இருந்து 30 மில்லியன் லிட்டர் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் செங்குன்றம் ஏரி முற்றிலும் வறண்டு விட்டதால் இன்னும் ஒரு வாரத்திற்கு மட்டுமே அங்கிருந்து தண்ணீர் கிடைக்கும் நிலை உள்ளது.

சமீபத்தில் பெய்த மழையும் கை கொடுக்காததால் அக்டோபர் மாதம் வரை தண்ணீர் பிரச்சினையை சமாளிக்க வேண்டிய நிலை சென்னை குடிநீர் வாரியத்திற்கு ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை பெய்தால் மட்டுமே தண்ணீர் பிரச்சினை தீரும் என்ற நிலை உருவாகி உள்ளது. இன்னும் 3 மாதங்கள் சென்னையின் குடிநீர் தேவையை சமாளிக்க தண்ணீர் தேவைப்படுகிறது.

சென்னையில் பல இடங்களில் குடிநீர் பைப் மூலம் தண்ணீர் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளது. லாரிகள் மூலம் தான் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. பணம் கொடுத்து லாரியில் தண்ணீர் பெறவும் ஒரு வாரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்து வருவதை அறிந்து குடிநீர் வாரியம் அடுத்த கட்ட நடவடிக்கையை தொடங்கியுள்ளது.

நெய்வேலி அருகில் பரனூர் ஆற்றுப்பகுதியில் 20 ஆழ்துளை கிணறுகள் அமைக்க முடிவு செய்துள்ளது. போர்க்கால அடிப்படையில் ஒரு சில நாட்களில் கிணறு போடுவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

புதிதாக போடப்படும் ஆழ்துளை கிணறுகளில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் வீராணம் குடிநீர் குழாய் மூலம் சென்னைக்கு வந்து சேரும். ஏற்கனவே சுரங்கத்தில் இருந்து எடுக்கப்படும் நீரும் அந்த குழாய் மூலம் தான் கொண்டு வரப்படுகிறது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்தால் தண்ணீர் தேவை குறைய வாய்ப்பு உள்ளது. நிலத்தடி நீர் மட்டமும் உயரும். ஆனால் 2 நாட்கள் பெய்த மழை தொடர்ந்து பெய்யாததால் ஏமாற்றம் அளிக்கிறது.

வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டு சிறு சிறு தூறல்கள் விழுவதால் தண்ணீர் பிரச்சினை குறைய வாய்ப்பு இல்லை. வடகிழக்கு பருவமழை பெய்தால் மட்டுமே இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com