

திருப்பத்தூர்:
திருப்பத்தூர் கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் எஸ்.கே.வி புக் ஷாப் என்ற பெயரில் நோட்டு புத்தக விற்பனை கடை உள்ளது. இதனை நேற்று இரவு வழக்கம்போல் பூட்டிச் சென்றனர்.இன்று அதிகாலை 3.30 மணிக்கு 4 பேர் கொண்ட கும்பல் கடைக்கு வந்தனர். அதில் ஒருவர் முகமூடி அணிந்திருந்தார்.3 பேர் கடையின் ஷட்டர் கதவை இரும்பு கம்பிகளால் நெம்பி தூக்கினர். அப்போது முகமூடி அணிந்த நபர் கடைக்குள் புகுந்து அங்கு மேஜை டிராவில் இருந்த பணத்தை கொள்ளையடித்தார். அவர் திரும்பி வந்ததும் 4 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இன்று காலையில் கடையில் கொள்ளை நடந்ததை கண்டு உரிமையாளர் ரமேஷ் குமார் திடுக்கிட்டார். இதுபற்றி திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கடையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
அதில் 4 பேர் கொண்ட கும்பல் கடைக்கு வந்து கதவை உடைத்து உள்ளே புகுந்து பணத்தை கொள்ளையடிக்கும் காட்சிகள் பதிவாகி உள்ளன. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவ நடந்த இடத்தின் அருகே தாலுகா அலுவலகம் டி.எஸ்.பி அலுவலகம் உள்ளது.
மேலும் கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் போலீசார் பொருத்தியுள்ள கண்காணிப்பு கேமராக்களும் உள்ளன.
இந்த நிலையில் துணிகர திருட்டு சம்பவம் நடந்துள்ளது திருப்பத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.