

பாப்பிரெட்டிப்பட்டி:
பொம்மிடி அருகே உள்ள குண்டலமடுவு கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி தமிழ்செல்வி இவரும் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகின்றனர்.
இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இதில் மூத்த குழந்தை கெல்வின் யோகேஷ் (வயது 4). இந்த குழந்தையும் அவர்கள் பணி புரியும் பள்ளியில் படித்து வந்தான்.
நேற்று பள்ளிக்கு சென்று விட்டு தாயுடன் பள்ளி வாகனத்தில் வந்து இறங்கிய கெல்வின் சாலையை கடக்க முயன்றான். அப்போது எதிரே அதிவேகமாக வந்த சரக்கு ஆட்டோ ஒன்று கெல்வின் யோகேஷ் மீது மோதி விட்டு அருகில் இருந்த பள்ளத்தில் சாய்ந்து நின்றது.
தாயின் கையை பிடித்து வந்த சிறுவன் தூக்கி வீசப்பட்டு தாயின் கண்ணெதிரே உயிருக்கு போராடியபடி இருந்தான்.
இதனை கண்ட தாய் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவனை மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே கெல்வின் யோகேஷ் இறந்து விட்ட தகவலை தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.