

திருக்கனூர்:
புதுவையில் வெடிகுண்டு கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. கடந்த 2 மாதத்தில் மட்டும் 4 ரவுடிகள் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்டனர். கடந்த 4 நாட்களுக்கு லாஸ்பேட்டையில் ஒரு ரவுடி வீட்டில் பதுக்கி வைத்திருந்த வெடிகுண்டுகளை போலீசார் கைப்பற்றினர்.
இந்த நிலையில் நேற்று இரவு புதுவை அருகே ரவுடிகள் மோதலில் வெடிகுண்டு வீச்சு சம்பவம் நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-
வில்லியனூர் அருகே பிள்ளையார்குப்பத்தை சேர்ந்த ஒரு ரவுடிக்கும், துத்திப்பட்டு பகுதியை சேர்ந்த ஒரு ரவுடிக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. ஒருவரையொருவர் கொல்ல திட்டமிட்டு இருந்தனர்.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு பிள்ளையார்குப்பம் ரவுடியை கொல்ல துத்திப்பட்டு ரவுடி கூட்டாளிகளுடன் வந்தார். ஆனால் இதனை அறிந்த பிள்ளையார்குப்பம் ரவுடி தப்பிஓடி விட்டார்.
இந்த நிலையில் நேற்று இரவு பிள்ளையார்குப்பம் ரவுடி தனது கூட்டாளிகளுடன் அங்குள்ள சங்கராபரணி ஆற்றின் கரையோரம் மோட்டார் சைக்கிள்களை நிறுத்திவிட்டு மது அருந்துவதாக துத்திப்பட்டு ரவுடிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரை கொல்ல துத்திப்பட்டு ரவுடி பயங்கர ஆயுதங்களுடன் தனது கூட்டாளிகளை அழைத்து கொண்டு சங்கராபரணி ஆற்றுக்கு வந்தார்.
இதனை எதிர்கொள்ளும் வகையில் நாட்டு வெடிகுண்டு மற்றும் ஆயுதங்களுடன் பிள்ளையார்குப்பம் ரவுடி காத்திருந்தார். அப்போது துத்திப்பட்டு ரவுடி கும்பல் நெருங்கி வந்தபோது அவர்கள் மீது எதிர்தரப்பு ரவுடி கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை வீசியது.
இதனால் பயந்து போன துத்திப்பட்டு ரவுடி கும்பல் தங்கள் கொண்டு வந்த மோட்டார் சைக்கிள்களை அங்கேயே போட்டு விட்டு தப்பி ஓடியது. இதையடுத்து அந்த மோட்டார் சைக்கிள்களை பிள்ளையார்குப்பம் ரவுடி கும்பல் பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்தது. பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதுபற்றி அறிந்ததும் வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிவேலு மற்றும் போலீசாரும் திருக்கனூர் போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்பபோது அங்கு எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் மீது தண்ணீரை ஊற்றி அணைத்தனர். இது தொடர்பாக இருதரப்பு ரவுடிகளையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது. எந்த நேரத்திலும் இருதரப்பு ரவுடிகளும் மோதிக்கொள்ளலாம் என்ற சூழல் ஏற்பட்டுள்ளதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.