

பாக்தாத்:
ஈராக் நாட்டில் ஐ.எஸ் தீவிரவாதிகள் வசமுள்ள மொசூல் நகரை அரசுப்படைகள் மீட்டதற்கு பதிலடியாக, பாக்தாத் நகரில் ஐஸ்கிரீம் பார்லர் அருகே தீவிரவாதிகள் நடத்திய கார்குண்டு தாக்குதலில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஈராக் நாட்டில் பல்வேறு நகரங்களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்து அட்டூழியத்தில் ஈடுபட்டு வரும் ஐ.எஸ் தீவிரவாதிகள், தற்போது பெருமளவு தங்கள் வசமிருந்த பகுதிகளை அரசுப்படையினரிடம் இழந்து வருகின்ற்னர். இதனால், தங்களது ஆத்திரங்களை தீர்த்துக்கொள்ள அப்பாவி பொதுமக்கள் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
ஐ.எஸ் அமைப்பின் வசமிருந்த பழமையான மொசூல் நகரை ஈராக் ராணுவம் சமீபத்தில் மீட்டது. இதனால், கொதிப்படைந்த அவர்கள் இன்று பாக்தாத் நகரில் உள்ள பிரபல ஐஸ்கிரீம் பார்லர் அருகே வெடிகுண்டுகள் நிரம்பிய காரை நிறுத்திவிட்டு சென்றுள்ளனர். ரமலான் மாதம் என்பதால் அதிக அளவிலான பொதுமக்கள் அங்கு கூடியிருந்தனர்.
அப்போது, காரிலிருந்த வெடிகுண்டுகள் பலத்த சப்தத்துடன் வெடித்தது. இந்த கோர தாக்குதலில் 13 பேர் உடல் சிதறி பலியாகினர். மேலும், 24 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர்.