பொலிவியாவில் செப்டம்பர் 6-ந்தேதி பொதுத்தேர்தல் - இடைக்கால அதிபர் ஒப்புதல்

பொலிவியாவில் செப்டம்பர் 6-ந் தேதி பொதுத் தேர்தலை நடத்த இடைக்கால அதிபர் ஜூனைன் அனெஸ் ஒப்புதல் அளித்துள்ளார்.
இடைக்கால அதிபர் ஜூனைன் அனெஸ்
இடைக்கால அதிபர் ஜூனைன் அனெஸ்
Published on

சுக்ரே:

தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் எவோ மாரல்ஸ் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆனால் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததாக கூறி எவோ மாரல்சுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது.

போராட்டத்தில் பொதுமக்களுடன் ராணுவமும் கலந்துகொண்டதால் மாரல்சுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் அவர் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி பொலிவியாவில் இருந்து வெளியேறி மெக்சிகோவில் தஞ்சம் அடைந்தார். அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்த பெண் எம்.பி. ஜூனைன் அனெஸ் தன்னைத்தானே இடைக்கால அதிபராக அறிவித்துக் கொண்டார்.

அப்போது அவர் நாட்டில் விரைவில் பொது தேர்தல் நடத்தப்படும் என அறிவித்தார். ஆனால் பொதுத் தேர்தல் எப்போது நடக்கும் என்பதை அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் அந்த நாட்டு நாடாளுமன்றத்தில், ஆகஸ்ட் 2ந் தேதிக்கு முன்னதாக பொதுத்தேர்தலை நடத்தி முடிக்கும் வகையில் மசோதாவை தாக்கல் செய்யப்பட்டது. அங்கு இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்ற போதும் அந்த மசோதாவுக்கு ஜூனைன் அனெஸ் ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டார்.

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் தேர்தலை நடத்துவது மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் அவர் கூறி வந்தார். இதனிடையே இது தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த அந்நாட்டு தேர்தல் கோர்ட்டு செப்டம்பர் 6-ந் தேதி பொதுத் தேர்தலை நடத்தலாம் என தீர்ப்பு வழங்கியது.

அதன்படி செப்டம்பர் 6-ந் தேதி பொதுத் தேர்தலை நடத்த இடைக்கால அதிபர் ஜூனைன் அனெஸ் ஒப்புதல் அளித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com