

போபர்ஸ் பீரங்கி பேர ஊழலில் இந்துஜா சகோதரர்கள் மீதான குற்றச்சாட்டுகளை கைவிட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, அக்டோபர் 30-ந்தேதி முதல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என சுப்ரீம் கோர்ட்டு அறிவித்தது.
இந்திய ராணுவத்துக்கு 400 பீரங்கிகள் வாங்குவதற்காக சுவீடனின் ‘போபர்ஸ்’ ஆயுத தயாரிப்பு நிறுவனத்துடன் கடந்த 1986-ம் ஆண்டு மார்ச் 24-ந்தேதி ஒப்பந்தம் போடப்பட்டது. ரூ.1437 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தை பெறுவதற்காக போபர்ஸ் நிறுவனம் இந்திய அரசியல் தலைவர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ரூ.64 கோடி அளவுக்கு லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்தது.
நாடு முழுவதும் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த ஊழலில் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்களின் பெயர்களும் அடிபட்டன.
இந்த ஊழல் தொடர்பாக போபர்ஸ் நிறுவன அப்போதைய தலைவர் மார்ட்டின் அர்ட்போ, தரகர்கள் வின் சத்தா, சோனியாகாந்தியின் உறவினர் குவாத்ரோச்சி மற்றும் ஐரோப்பிய தொழிலதிபர்களான இந்துஜா சகோதரர்கள் உள்ளிட்ட ஏராளமான உள்நாடு மற்றும் வெளிநாட்டினர் மீது சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்தது.
ஆனால் இந்த வழக்கில் இந்துஜா சகோதரர்கள் மீதான குற்றச்சாட்டுகளை ரத்து செய்வதாக டெல்லி ஐகோர்ட்டு கடந்த 2005-ம் ஆண்டு அறிவித்தது.
இதை எதிர்த்து சி.பி.ஐ. தரப்பில் மேல்முறையீடு செய்யப்படாத நிலையில், அஜய்குமார் அகர்வால் என்ற பா.ஜனதா தலைவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அவரது மனுவை 2005-ம் ஆண்டு அக்டோபர் 18-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.
சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருக்கும் இந்த மனுவை விரைவாக விசாரித்து தீர்ப்பு வழங்குமாறு அஜய்குமார் அகர்வால் தரப்பில் இடைக்கால மனு ஒன்று சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோரை கொண்ட அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
இதை விசாரித்த நீதிபதிகள் இந்துஜா சகோதரர்கள் மீதான குற்றச்சாட்டை ரத்து செய்ததை எதிர்த்து ஏற்கனவே தொடரப்பட்ட வழக்கு அக்டோபர் 30-ந்தேதி முதல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவித்தனர்.