

சென்னை:
அமெரிக்காவின் பிரபல பாதுகாப்பு தளவாடங்களை தயாரிக்கும் போயிங் நிறுவனம் சூப்பர் ஹார்னட் ரக, போர் விமானங்களை இந்தியாவில் தயாரிக்க, இந்தியாவின், பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோ நாட்டிகல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதில், மஹிந்திரா நிறுவனமும் இணைந்துள்ளது.
இது தொடர்பாக போயிங் நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவர் பிரத்யூஷ் குமார் கூறியதாவது:-
இந்தியாவில் போர் விமானம் தயாரிக்கும் ஒரே நிறுவனமான இந்துஸ்தான் ஏரோ நாட்டிகல் உடனும், சிறிய வகை வணிக விமானங்கள் தயாரிக்கும் நிறுவனமான மஹிந்திராவுடனும் ஒப்பந்தமிட்டுள்ளோம். இதன் மூலம், இந்தியாவின் வான்வெளி பாதுகாப்பு மற்றும் தளவாட உற்பத்தியில் மிகப்பெரிய உந்துதல் ஏற்படும்.
ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியாவிலேயே சூப்பர் ஹார்னட் ரக விமானங்கள் தயாரிக்க ஆலை அமைக்கப்படும். இந்த ஆலை, இந்த ரக விமானத்தை தயாரிப்பதோடு மட்டுமல்லாமல், இந்தியாவின் அதிநவீன நடுத்தர போர் விமானம் தயாரிக்கும் திட்டத்திற்கும் பயன்படுத்திக்கொள்ள முடியும். போயிங் நிறுவனம், இந்திய தளவாட உற்பத்தி நிறுவனங்களுடன், தொழில்நுட்ப ரீதியாக இணைந்து செயல்பட வழிவகை ஏற்படும். சூப்பர் ஹார்னட் ரக விமான தொழில்நுட்ப மாதிரியை, பிறவகை விமானங்களிலும் பயன்படுத்த முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.