குமரி மாவட்டத்தில் பரவலாக மழை- விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து ரத்து

குமரியில் பெய்த மழை காரணமாக கடல் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
நாகர்கோவிலில் இன்று காலை பள்ளிச்சென்ற மாணவர்கள் மழையில் இருந்து தப்பிக்க குடைபிடித்துச் செல்லும் காட்சி.
நாகர்கோவிலில் இன்று காலை பள்ளிச்சென்ற மாணவர்கள் மழையில் இருந்து தப்பிக்க குடைபிடித்துச் செல்லும் காட்சி.
Published on

கன்னியாகுமரி:

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்தது.

வழக்கமாக தென் மாவட்டங்களில் பெரிய அளவில் வடகிழக்கு பருவமழை பெய்வதில்லை. ஆனால் இந்த ஆண்டு பலத்த மழை பெய்தது. கடந்த 2 வாரங்களாக மழை சற்று ஓய்ந்திருந்தது.

இந்த நிலையில் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் 20-ந்தேதி பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.

வானிலை மைய அறிவிப்பு படி குமரி மாவட்டத்தில் நேற்று மாலை முதலே பல இடங்களில் சாரல் மழை பெய்தது. இன்று அதிகாலையிலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

காலை 8 மணி அளவில் நாகர்கோவில் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. நேரம் செல்ல, செல்ல மழையின் வேகம் அதிகரித்தது.

நாகர்கோவிலை போல் கன்னியாகுமரியிலும் இன்று அதிகாலை முதலே மழை பெய்தபடி இருந்தது. இதனால் கன்னியாகுமரி வந்த சுற்றுலா பயணிகள் காலையில் சூரியோதயத்தை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது.

மழை காரணமாக கடல் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு படகு போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

குமரி கிழக்கு மாவட்டத்தில் பெய்த மழை போல் மேற்கு மாவட்ட பகுதிகளான குழித்துறை, மார்த்தாண்டம், திருவட்டார், குலசேகரம் மற்றும் திற்பரப்பு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

மழை காரணமாக திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியது. மழையால் இன்று காலை பள்ளி, கல்லூரிகளுக்கு சென்ற மாணவ- மாணவிகள் மழையில் நனைந்தபடி சென்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com