திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் மோதல் - பா.ஜ.க பெண் நிர்வாகி ஆஸ்பத்திரியில் அனுமதி

திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் நேற்று அய்யாக்கண்ணு மற்றும் பா.ஜ.க பெண் நிர்வாகி இடையே ஏற்பட்ட மோதலையடுத்து பெண் நிர்வாகி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் மோதல் - பா.ஜ.க பெண் நிர்வாகி ஆஸ்பத்திரியில் அனுமதி
Published on

திருச்செந்தூர்:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், மரபணு மாற்றப்பட்ட விதைகளின் மூலம் விவசாயம் செய்வதை தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் குழுவினர் சென்னை கோட்டை நோக்கி விழிப்புணர்வு பிரசார பயணத்தை தொடங்கினர்.

கடந்த 1-ந்தேதி தங்களது பயணத்தை கன்னியாகுமரியில் தொடங்கிய இவர்கள் 8-வது நாளான நேற்று தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் இருந்து பிரசார பயணத்தை தொடங்கினர்.

பின்னர் ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலுக்கு சென்று மண்டியிட்டு வணங்கி நூதன பிரசாரத்தில் ஈடுபட்டார்கள். இதன்பிறகு அய்யாக்கண்ணு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்றார். அங்கு சாமி தரிசனம் செய்த அய்யாக்கண்ணு மற்றும் விவசாயிகள் கோவில் வளாகத்தில் சண்முகவிலாச மண்டபம் முன்பிருந்த பக்தர்களிடம் கோரிக்கை விளக்க துண்டுபிரசுரங்களை வினியோகம் செய்தனர்.

அப்போது அங்கு வந்த திருச்செந்தூர் வீரராகவபுரம் தெருவை சேர்ந்த பாரதிய ஜனதா மாவட்ட மகளிர் அணி பொதுச்செயலாளர் நெல்லையம்மாள் கோவிலில் அய்யாக்கண்ணு பிரசாரம் மேற்கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது அய்யாக்கண்ணு தரப்பினருக்கும் நெல்லையம்மாளுக்கும் இடையே வாக்குவாதம் உண்டானது.

இதையடுத்து நெல்லையம்மாள், அய்யாக்கண்ணுவின் முகத்தில் கையால் தாக்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள், நெல்லையம்மாளை தாக்க முயன்றனர். உடனே அருகில் இருந்த பக்தர்கள், கோவில் காவலாளிகள் விரைந்து சென்று, அவர்களை சமாதானப்படுத்தினர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தொடர்ந்து அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் மீண்டும் கோவில் வளாகத்தில் துண்டுபிரசுரங்களை வினியோகம் செய்தனர். அப்போது மீண்டும் அங்கு வந்த நெல்லையம்மாள் மற்றும் பா.ஜனதா நகர செயலாளர் வக்கீல் சரவணன் ஆகியோர் கோவில் வளாகத்தில் துண்டுபிரசுரம் வினியோகம் செய்யக்கூடாது எனக்கூறி வாக்குவாதம் செய்தனர்.

இதனிடையே விவசாயிகள் தள்ளி விட்டு தாக்கியதில் காயம் அடைந்ததாக நெல்லையம்மாள் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து நெல்லையம்மாள் திருச்செந்தூர் கோவில் போலீசில் புகார் செய்தார். ஆனால் அந்த பெண் தாக்கியது தொடர்பாக அய்யாக்கண்ணு தரப்பில் புகார் எதுவும் கொடுக்கவில்லை. போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அய்யாக்கண்ணு கூறுகையில், “வேண்டும் என்றே பா.ஜனதாவினர் கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுகின்றனர். பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா பெரியார் சிலையை உடைப்போம் என்று கூறுகிறார். இங்கும் ஒரு பா.ஜனதா பெண் பிரமுகர் வன்முறையை தூண்டும் வகையில், கோவிலில் துண்டுபிரசுரம் வினியோகம் செய்யக்கூடாது என்று கூறுகிறார். பா.ஜனதாவினரை விட எங்களுக்கு அதிகமாக தெய்வ பக்தி உள்ளது. தொடர்ந்து 32 மாவட்டங்களிலும் பிரசாரம் மேற்கொள்வோம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லையெனில், பிரதமர் வீட்டின் முன்பு உண்ணாவிரதம் இருப்போம்” என்றார். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com