நாகலாந்தில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் - கிரண் ரிஜிஜு நம்பிக்கை

நாகலாந்து மாநிலத்தில் இதர கட்சிகளின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைப்போம் என மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நாகலாந்தில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் - கிரண் ரிஜிஜு நம்பிக்கை
Published on

புதுடெல்லி:

நாகலாந்து மாநிலத்தை ஆட்சி செய்த நாகா மக்கள் முன்னணி தலைமையிலான கூட்டணி அரசில் இடம்பெற்றிருந்த பா.ஜ.க. அந்த கூட்டணியை முறித்து கொண்டது. புதிதாக தொடங்கப்பட்ட தேசியவாத குடியரசு முன்னேற்ற கட்சியுடன் கூட்டணி அமைத்து சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலை பா.ஜ.க. சந்தித்தது.

தற்போது வெளியாகிவரும் தேர்தல் முடிவுகளின்படி நாகா மக்கள் முன்னணி 17 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மேலும், 8 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

பா.ஜ.க. 9 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 2 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. தேசியவாத குடியரசு முன்னேற்ற கட்சி 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 10 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

இங்கு ஆட்சி அமைக்க 31 இடங்களை பெற்றாக வேண்டும் என்னும் நிலையில், தேர்தலுக்கு முன்னர் தனது கூட்டணி கட்சியாக இருந்த நாகா மக்கள் முன்னணியுடன் மீண்டும் இணைந்து ஆட்சி அமைப்பதில் பா.ஜ.க. ஆர்வம் காட்டி வருகிறது.

இதுதொடர்பாக, டெல்லியில் இன்று மாலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய மந்திரியும் நாகலாந்து மாநில தேர்தல் பொறுப்பாளருமான கிரண் ரிஜிஜு, நாகலாந்தில் மற்ற கட்சிகளுடன் ஆதரவுடன் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். 17 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நாகா மக்கள் முன்னணியுடன் கூட்டணி சேருவீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த ரிஜிஜு, பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்கப் போவதாக நாகா மக்கள் முன்னணி ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றியுள்ளது என்று சுட்டிக் காட்டினார்.

நாகலாந்தில் பெற்றுள்ள வெற்றியின் மூலம் வடகிழக்கு இந்தியாவில் பா.ஜ.க. தன்னை நிலைநாட்டிக் கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், இதனால் வடகிழக்கு மாநிலங்களுக்கும் இந்தியாவுக்கும் நன்மை கிடைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com