

அகர்தலா:
வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகலாந்து சட்டசபைகளுக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. இந்த 3 மாநிலங்களும் தலா 60 சட்டசபை தொகுதிகள் கொண்டவை. 3 மாநிலங்களிலும் வேட்பாளர் மரணம் உள்ளிட்ட காரணங்களால் தலா 59 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடந்தது.
இன்று காலை 8 மணிக்கு இந்த மாநிலங்களில் பதிவான ஓட்டுக்கள் எண்ணிக்கை தொடங்கியது. இதில் திரிபுரா, நாகலாந்தில் பா.ஜனதா கட்சி ஆட்சியை பிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
திரிபுராவில் 25 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆட்சி நடந்து வருகிறது. மாணிக் சர்க்கார் முதல்-மந்திரியாக இருந்து வருகிறார்.
கடந்த தேர்தலில் 49 இடங்களைக் கைப்பற்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு இன்று காலை தொடங்கிய ஓட்டு எண்ணிக்கையில் இழுபறி நிலையில் இருந்து வந்தது.
தொடக்கத்தில் ஆட்சி அமைக்க தேவையான 30 இடங்களை தாண்டி முன்னணி வகித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு பா.ஜனதா நெருக்குதல் கொடுத்து பின்னுக்கு தள்ளியது.
மதியம் 1 மணி நிலவரப்படி பா.ஜனதா 41 இடங்களிலும், கம்யூனிஸ்டு 18 இடங்களிலும் முன்னணியில் உள்ளன. தொடர்ந்து பா.ஜனதா முன்னணி வகித்து வருவதால் அந்த கட்சியே ஆட்சியை கைப்பற்றும் நிலை ஏற்பட்டுள்ளது என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
திரிபுரா சட்டசபையில் கடந்த முறை பாஜகவுக்கு ஒரு எம்.எல்.ஏ. கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கம்யூனிஸ்டு கோட்டையில் சரிவு ஏற்பட்டு பா.ஜனதா செல்வாக்கு அதிகரித்து வருவதையே இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகிறது.
இதையடுத்து, பா.ஜ.க. தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் தங்களது வெற்றியை கொண்டாடி வருகின்றனர். #tamilnews