மக்கள் எதிர்க்கும் திட்டத்தை பா.ஜ.க. அரசு திணிக்கிறது: ஜி.கே.வாசன் பேட்டி

ஜி.எஸ்.டி. அமலில் பா.ஜ.க. அரசு அவசரம் காட்டியதாகவும், மக்கள் எதிர்க்கும் திட்டத்தை திணிப்பதாகவும் ஜி.கே.வாசன் சாடினார்.
மக்கள் எதிர்க்கும் திட்டத்தை பா.ஜ.க. அரசு திணிக்கிறது: ஜி.கே.வாசன் பேட்டி
Published on

வேலூர்:

வேலூரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- தமிழக சட்டமன்றத்தில் காவல் துறை மீதான மானிய கோரிக்கையில் பேசிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சட்டம்-ஒழுங்கு சரியாக இருப்பதாக கூறினார்.

ஆனால் தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு மோசமாக உள்ளது. திருட்டு, கொலை, செயின் பறிப்பு, குழந்தை திருட்டு சம்பவங்கள் அதிகம் நடைபெறுகிறது. ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாகவும், சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஊடகங்களில் செய்திகள் வருகின்றன.

மத்திய உளவுத்துறை சரி இல்லை. எனவே, மாநில அரசு தனிப்படை அமைத்து குற்றச் செயல்களை தடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் பயங்கரவாதத்துக்கு இடம் கொடுக்கக் கூடாது. அதனை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். சட்டம்- ஒழுங்கு பிரச்சினையால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்படுவதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், எல்லை மீறி வந்ததாக கூறி இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்படும் தமிழக படகுகளுக்கு அபராதம் விதிக்கும் சட்ட மசோதாவை இலங்கை அரசு பாராளு மன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

இதனால் ராமேஸ்வர மீனவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த மசோதாவை இலங்கை அரசு திரும்ப பெற வேண்டும்.

காவிரி, முல்லை பெரியாறு, பாலாற்றில் அண்டை மாநில அரசுகள் தடுப்பணை கட்டி வருகிறது. இதனால் தமிழகத்தில் குடிநீர் பிரச்சினை நிலவுகிறது. தமிழகத்திலும் ஆறுகளில் தடுப்பணை கட்ட வேண்டும். கடலில் சென்று கலக்கும் உபரி நீரை அணைகளை கட்டி சேமிக்க வேண்டும்.

மத்திய அரசு நதிநீர் இணைப்பு திட்டத்தில் மெத்தன போக்குடன் செயல்பட்டு வருகிறது. புதுச்சேரி, மேற்கு வங்கத்தில் மக்களாட்சி நடக்கிறது. அந்த மாநிலங்களில் கவர்னர்கள் மூலம் மத்திய அரசு எதிராக செயல்பட்டு வருகிறது.

மாநில வளர்ச்சிக்கு கவர்னர் துணை நிற்க வேண்டும். அதிகார போட்டியால் மக்கள் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. குட்கா புகாரில் சிக்கியவர்கள், குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் பதவி விலக வேண்டும். தமிழகம் கலவர பூமியாக மாறி விடக் கூடாது.

கதிராமங்கலத்தில் போராடிய கிராம மக்களை பொய் வழக்கு போட்டு கைது செய்துள்ளனர். நிபந்தனைகளின்றி அவர்களை விடுதலை செய்ய வேண்டும். மாற்று மணலுக்கு ஏற்பாடு செய்து தர வேண்டும். மணல் தட்டுப்பாட்டால் கட்டிட தொழிலாளர்கள் வேலை இழந்து தவிக்கிறார்கள்.

மக்கள் எதிர்க்கும் திட்டத்தை பா.ஜ.க. அரசு திணிக்கிறது. ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தியதில் மத்திய அரசு அவரசம் காட்டியது. ஜி.எஸ்.டி. வரியால் விலைவாசி உயர்ந்துள்ளது. கால அவகாசம் கேட்டு, அனைத்து துறையினரிடமும் கருத்து கேட்டு ஜி.எஸ்.டி.யை அமல்படுத்தி இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பேட்டியின் போது மாநில செயலாளர்கள் தசரதன், நந்து, மாநில துணைத் தலைவர் ஏ.எம்.வேலு, டாக்டர் ராமு, மத்திய மாவட்ட தலைவர் பி.எஸ்.பழனி, குப்புசாமி, அரிதாஸ், ஜீவானந்தம் உள்பட நிர்வாகிகள் பலர் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com