மும்பை தீ விபத்திற்கு அதிக மக்கள் தொகையே காரணம் - நடிகை ஹேமமாலினி

மும்பையில் அதிக மக்கள் வாழ்வதே கமலா மில் வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்திற்கு காரணம் என நடிகையும் பா.ஜ.க. எம்.பி.யுமான ஹேமமாலினி கூறியுள்ளார்.
மும்பை தீ விபத்திற்கு அதிக மக்கள் தொகையே காரணம்  - நடிகை ஹேமமாலினி
Published on

புதுடெல்லி:

மராட்டிய மாநிலம் மும்பையின் லோயர் பரேலில் அமைந்துள்ள கட்டிடத்தில் உள்ளது கமலா மில் வளாகம். சேனாபதி மார்க் பகுதியில் அமைந்த இந்த வளாகத்தின் 3-வது மாடியில் நேற்று அதிகாலை 12.30 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 11 பெண்கள், 3 ஆண்கள் என மொத்தம் 14 பேர் உயிரிழந்தனர். அது குறித்து பாராளுமன்றத்துக்கு வெளியே நடிகையும் பா.ஜ.க. எம்.பி.யுமான ஹேமமாலினி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறும்போது, ‘‘மும்பை தீ விபத்திற்கு அதிக மக்கள் தொகையே காரணம். இச்சம்பவத்தில் போலீசார் சிறப்பாக பணிபுரிந்தனர். மும்பையில் மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்து விட்டது. மும்பையை விரிவுபடுத்தாவிட்டால் மக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்படும் நெருக்கடியை கட்டுப்படுத்த முடியாது.  

மக்கள் தொகையை கட்டுப்படுத்த ஒவ்வொரு நகரிலும் குறிப்பிட்ட அளவு மக்கள் தொகை மட்டுமே இருக்க வேண்டும். அதற்கு மேல் இங்கு குடியிருக்க அனுமதிக்க கூடாது. கூடுதலாக இருப்பவர்களை வேறு நகரில் குடியமர்த்த வேண்டும்’’ என்றார்.

இந்த தீ விபத்து தொடர்பாக மோஜோ பிஸ்ரா ஓட்டல் மதுவிடுதியை நடத்திய ஹ்ராதோஷ் சாங்வி, ஜிகார் சாங்வி மற்றும் அபிஜீத் மங்கா ஆகிய 3 பேர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், ஹேமமாலினியின் இந்த கருத்திற்கு சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. தீ விபத்திற்கு மக்கள் தொகை காரணம் இல்லை. சரியான பாதுகாப்பு வசதிகள் செய்யப்படாதது தான் முக்கிய காரணம் என பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com