வரும் நாடாளுமன்ற தேர்தல் பாண்டவர்கள்-கவுரவர்கள் இடையேயான தர்ம யுத்தம்: பா.ஜனதா எம்.எல்.ஏ. வர்ணனை

வரும் நாடாளுமன்ற தேர்தல், குருஷேத்திர களத்தில் பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் இடையே நடந்த தர்மயுத்தம் போன்றது என்று பா.ஜனதா எம்.எல்.ஏ. சுரேந்திர சிங் கூறியுள்ளார்.
வரும் நாடாளுமன்ற தேர்தல் பாண்டவர்கள்-கவுரவர்கள் இடையேயான தர்ம யுத்தம்: பா.ஜனதா எம்.எல்.ஏ. வர்ணனை
Published on

பாலியா:

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்தல் நடக்க உள்ளது. இது தொடர்பாக உத்தரபிரதேச மாநிலம், பைரியா தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ., சுரேந்திர சிங் நேற்று நிருபர்களிடம் பேசினார்.

அப்போது அவர், “வரும் நாடாளுமன்ற தேர்தல், குருஷேத்திர களத்தில் பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் இடையே நடந்த தர்மயுத்தம் போன்றது” என்று குறிப்பிட்டார்.தொடர்ந்து அவர் கூறும்போது, “பாண்டவர்கள் தரப்பில் தளபதியாக அர்ஜூனன் இடத்தில் பிரதமர் நரேந்திர மோடி இருப்பார். சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங்கும், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர் லாலுபிரசாத்தும் திருதராஷ்டிரன்கள். இந்த ஜனநாயக போர்க்களத்தில் பிரதமர் மோடி வெற்றி பெறுவார்” என்று குறிப்பிட்டார்.

ராகுல் காந்தியை சாடிய அவர், “ராகுல் காந்திக்கும், இந்தியாவுக்கும், இந்திய தன்மைக்கும் எந்த தொடர்பும் கிடையாது. ராகுலுக்கு அரசியல் திறன் கிடையாது. அவர்தான் காங்கிரஸ் கட்சியின் கடைசி தலைவர்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு பிறகு நாடு, காங்கிரஸ் கட்சி இல்லாத நாடு ஆகி விடும். ராகுல் காந்தி, இந்தியாவில் இருந்து வெளியேறி இத்தாலியில் குடியேறி விடுவார்” என்றார்.

இந்த பேச்சு, அரசியல் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com