

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கக்கன்பாரா பகுதியை சேர்ந்தவர் பிஜூ(வயது34). இவர் அந்த பகுதி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தலைவராக இருந்தார். அவர் நேற்று மாலை 4 மணி அளவில் தனது மோட்டார் சைக்கிளில் பாலக்கோடு அருகே முட்டம் என்ற இடத்தில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, பின்னால் வந்த ஒரு சொகுசு கார் அவரது மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவரை காரில் இருந்து இறங்கிய மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டினார்கள். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
ஆர்.எஸ்.எஸ். தலைவர் பிஜூவை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தான் கொலை செய்ததாக குற்றம் சாட்டிய பா.ஜ.க.வினர் இந்த கொலையை கண்டித்து கண்ணூர் மாவட்டத்தில் இன்று முழுஅடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.