ஆம்பூரில் பா.ஜ.க. பிரமுகரை வெட்டி கொல்ல முயற்சி: மர்ம கும்பல் 3 பேர் தாக்குதல்

ஆம்பூரில் பா.ஜ.க. பிரமுகரை வெட்டி கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆம்பூரில் பா.ஜ.க. பிரமுகரை வெட்டி கொல்ல முயற்சி: மர்ம கும்பல் 3 பேர் தாக்குதல்
Published on

ஆம்பூர்:

வேலூர் மாவட்டம் ஆம்பூர் சாணாங்குப்பம் அழகாபுரி பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 35). பா.ஜ.க.வின் ஆம்பூர் நகர இளைஞரணி தலைவராக உள்ளார். இன்று காலையில் சங்கர், அதே பகுதியில் உள்ள சாய்பாபா கோவில் அருகே சென்றுக் கொண்டிருந்தார்.

அப்போது அவரை, 3 பேர் கொண்ட கும்பல் அரிவாள், பயங்கர ஆயுதங்களுடன் திடீரென வழி மறித்தது. சங்கரை உருட்டு கட்டையால் தாக்கி அரிவாளால் சரமாரியாக வெட்டினர். அவரது தலையில் பலத்த வெட்டு விழுந்தது. இதில் நிலைகுலைந்து சுருண்டு விழுந்த சங்கரை, அந்த கும்பல் கொலை செய்ய முயன்றது.

சம்பவத்தை நேரில் பார்த்த சங்கரின் ஆதரவாளர்கள் விரைந்து ஓடி வந்தனர். இதையடுத்து, 3 பேர் கும்பலும் தலைத்தெறிக்க தப்பி ஓடி விட்டனர். பலத்த காயமடைந்த சங்கரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. டாக்டர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இச்சம்பவம் குறித்து, ஆம்பூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பா.ஜ.க. பிரமுகர் சங்கரை கொலை செய்ய முயன்ற கும்பல் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

பா.ஜ.க. பிரமுகரை கொலை முயன்ற சம்பவம் ஆம்பூரில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com