

நெல்லை:
நெல்லை புதிய பஸ் நிலையத்தையொட்டி உள்ளது வேய்ந்தான்குளம். 54 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளம் தன்னார்வலர்கள் மூலம் தூர்வாரப்பட்டு, குளத்தின் கரைகள் சுற்றிலும் பலப்படுத்தப்பட்டது. குளத்திற்கு தண்ணீர் வந்ததும், பறவைகள் வந்து அமர்ந்து செல்லும் வகையில் குளத்தின் நடுவே ஆங்காங்கே மண் திட்டுகள் உருவாக்கப்பட்டு இருந்தன.
இந்நிலையில் தற்போது பெய்த வடகிழக்கு பருவமழையால் வேய்ந்தான்குளம் நிரம்பியது. இதையடுத்து குளத்துக்கு பல்வேறு இன பறவைகள் வந்து குவிந்துள்ளன. கடந்த 10 நாட்களில் வேய்ந்தான்குளத்திற்கு 1000-க்கும் மேற்பட்ட 25 வகையான பறவையினங்கள் வந்துள்ளன. ஐரோப்பிய கண்டத்தில் இருந்து நீல சிறகு வாத்து, வெளிநாட்டு பறவைகளான பவளக்கால், செங்கால் நாரை உள்ளிட்ட பல்வேறு பறவையினங்கள் வேய்ந்தான்குளத்திற்கு வந்துள்ளன.
நாமகோழி கூடு கட்டி தனது குஞ்சுகளுடன் காணப்படுகிறது. அவை தண்ணீரில் ஆனந்தமாக நீந்துகின்றன. இதையொட்டி சமீபத்தில் கலெக்டர் ஷில்பா குளத்து தண்ணீரில் பறவைகளுக்காக சுமார் 2000 மீன்குஞ்சுகளை விட்டார். நேற்று வேய்ந்தான் குளத்தில் காணப்படும் பறவை இனங்கள் குறித்த கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. மேலும் பறவைகள் திருவிழாவாகவும் கொண்டாடப்பட்டது. அதிகாரிகள் குளத்தை சுற்றி வந்து தொலைநோக்கி மூலம் பறவைகளை இனம் கண்டு கணக்கெடுத்தனர்.
இதுகுறித்து அகத்தியமலை மக்கள்சார் இயற்கை வள காப்பு மைய நிர்வாகி மதிவாணன் கூறியதாவது:-
அகத்தியமலையில் உற்பத்தியாகும் தாமிரபரணி மற்றும் அவற்றின் துணை ஆறுகளின் மூலம் தண்ணீர் வரத்தை பெற்றுள்ள நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட குளங்களில் தற்போது தாமிரபரணி பறவைகள் திருவிழா நடத்தப்படுகிறது. நெல்லையில் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள வேய்ந்தான்குளத்தில் பறவைகள் திருவிழா நடத்திட முடிவு செய்யப்பட்டது.
தற்போது வேய்ந்தான் குளத்துக்கு வடமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பறவைகள் வரத் தொடங்கி உள்ளன. தொடர்ந்து அதிகமான பறவைகள் வர வாய்ப்பு உள்ளது. குளத்தின் நடுவே ஆங்காங்கே மண் திட்டுகள் உள்ளன. அங்கு வள்ளிக்கிழங்கு தாவரம், வெட்டிவேர் செடிகள் மற்றும் மரக்கன்றுகள் நடவு செய்யப்படும்.
பொதுமக்கள் இங்கு வரும் பறவைகளை கண்டுகளிக்க அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. யாரும் கரை பகுதியை ஆக்கிரமிக்கக்கூடாது. நீர்நிலைகளை பாதுகாப்பது நமது கடமை. வேய்ந்தான்குளம் விரைவில் சுற்றுலா மையமாக மாறும். குளத்தை சுற்றிலும் நடைபயிற்சி மேற்கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குளத்தை சுற்றிலும் மூலிகை செடிகள் நடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் வருகிற 5-ந்தேதி ஆழ்வார்குறிச்சியில் உள்ள வாகைக்குளத்திலும், வருகிற 12-ந்தேதி ஆறுமுக மங்கலம் மற்றும் ஸ்ரீவைகுண்டம் பகுதி குளங்களிலும் பறவைகள் திருவிழா நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் திரளாக வந்து பார்த்து ரசிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.