வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கும் பணியில் கால்நடைத்துறையினர்
வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கும் பணியில் கால்நடைத்துறையினர்

பறவை காய்ச்சல் பாதிப்பு- கேரளாவில் இருந்து வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிப்பு

பறவை காய்ச்சல் எதிரொலியாக கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் கனரக வாகனங்கள் மற்றும் கார், லாரிகள் உள்ளிட்டவைகளுக்கு கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.
Published on

செங்கோட்டை:

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம், கொடியாதூர், வென்கயேரி கிராமங்களில் உள்ள பண்ணைகளில் கோழிகள் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த காய்ச்சல் தமிழகத்திற்கு பரவாமல் தடுக்க கால்நடைத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்காக தமிழக கால்நடைத்துறை சார்பில் தமிழக-கேரள எல்லையான புளியரை சோதனை சாவடியில் சிறப்பு செக்போஸ்ட்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி மருந்து தெளிக்குமாறு கால்நடைத்துறை உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில் புளியரையில் கால்நடைத்துறை அதிகாரிகள் ஒரு குழுவாக முகாமிட்டுள்ளனர். அவர்கள் தமிழகத்திற்கு வரும் கனரக வாகனங்கள் மற்றும் கார், லாரிகள் உள்ளிட்டவைகளுக்கு கிருமி நாசினியை தெளிக்கின்றனர். இதற்காக கிருமி நாசினி நிரப்பப்பட்ட டின்களை கால்நடைத்துறை ஊழியர்கள் தங்கள் முதுகில் சுமந்தபடி தமிழக எல்லைக்குள் வரும் அனைத்து வாகனங்களிலும் தெளிக்கின்றனர்.

கால்நடைத்துறை மருத்துவ குழுவினர் முகக்கவசம் அணிந்தபடி வாகன ஓட்டிகளுக்கு பறவை காய்ச்சல் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர். இதேபோன்று தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் முட்டை மற்றும் கோழிகளை ஏற்றிச்செல்லும் லாரிகளும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு முழுமையாக சுத்தம் செய்யப்பட்ட பின்னரே கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com