

கோவை:
கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டம், கொடியாதூர், வென்கயேரி கிராமங்கள் உள்ளன. இங்குள்ள பண்ணைகளில் கோழிகள் பறவைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டன. இதனால் தமிழக கால்நடைத்துறை சார்பில் தமிழக-கேரள எல்லை பகுதிகளில், சிறப்பு செக்போஸ்ட்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
பறவை காய்ச்சல் தொடர்பாக கால்நடை பராமரிப்புத்துறை இயக்குனர் கேரள மாநில கால்நடை பராமரிப்புத்துறை இயக்குனரிடம் ஆலோசனை நடத்தினார்.
சம்பந்தப்பட்ட 2 கிராமங்களில் உள்ள அனைத்து கோழிகளையும் உடனடியாக அழிக்க முடிவு செய்யப்பட்டது. தமிழகத்தில் உள்ள அனைத்து கோழிப் பண்ணைகளையும் தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் கனரக வாகனங்கள், லாரிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தமிழக எல்லைக்குள் அனுமதிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் 8 இடங்களிலும், கோவை மாவட்டத்தில் 12 இடங்களிலும், கன்னியாகுமரி மாவட்டம் உள்பட 26 இடங்களில் தலா ஒரு குழு அமைக்கப்பட்டு கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதேபோன்று தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் முட்டை மற்றும் கோழிகளை ஏற்றிச்செல்லும் லாரிகளுக்கும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு முழுமையாக சுத்தம் செய்யப்பட்ட பின்னரே கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
கோவை, திருப்பூர் பகுதிகளில் உள்ள கோழிப்பண்ணை உரிமையாளர்களுக்கு இதுகுறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் 1962 என்ற எண்ணுக்கு போன் செய்தால் வீடு தேடி அம்மா ஆம்புலன்ஸ் மூலமாக கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.