இ-சிகரெட்டுக்கு தடை: அவசர சட்டத்திற்கு பதிலாக மக்களவையில் புதிய மசோதா தாக்கல்

இ-சிகரெட்டுக்கு தடை விதிக்கும் அவசர சட்டத்திற்கு பதிலாக மக்களவையில் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாராளுமன்றம்
பாராளுமன்றம்
Published on

புதுடெல்லி:

இ-சிகரெட் எனப்படும் எலக்ட்ரானிக் சிகரெட்டுக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்து, அதற்காக கடந்த செப்டம்பர் மாதம் 18-ம் தேதி அவசர சட்டத்தை பிறப்பித்தது. அதன்படி, இ-சிகரெட்டுகளை உற்பத்தி செய்தல், விற்பனை செய்தல் மற்றும் இ-சிகரெட் தொடர்பான அனைத்து செயல்பாடுகளும் குற்றமாக கருதப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், இ-சிகரெட்டை தடை செய்யும் அவசர சட்டத்திற்குப் பதிலாக, மக்களவையில் இன்று இ-சிகரெட் தடைச்சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மத்திய சுகாதாரத் துறை மந்திரி ஹர்ஷ் வர்தன் இந்த மசோதாவை தாக்கல் செய்தார். 

இ-சிகரெட்டுகளை உற்பத்தி செய்தல், ஏற்றுமதி-இறக்குமதி செய்தல், சேமித்து வைத்தல், அனுப்புதல், விற்பனை செய்தல், விளம்பரம் செய்தல் ஆகியவை அபராதத்துடன் கூடிய தண்டனைக்குரிய குற்றமாக கருதப்பட்டு, தண்டனை மற்றும் அபராதம் விதிக்க இந்த சட்ட மசோதா வகை செய்கிறது.

இந்த சட்டத்தை மீறி முதல்முறை தவறு செய்பவர்களுக்கு ஓராண்டுவரை ஜெயில் தண்டனை அல்லது ரூ.1 லட்சம்வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். அடுத்தடுத்து தவறு செய்பவர்களுக்கு 3 ஆண்டுவரை ஜெயில் தண்டனை அல்லது ரூ.5 லட்சம்வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.

இதேபோல் இ சிகரெட்டுகளை சேமித்து வைத்தால் 6 மாத சிறைத்தண்டனை அல்லது 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம், அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.

இ-சிகரெட் உற்பத்தி செய்யும் இடங்கள் மற்றும் குடோன்களில் அதிரடியாக சோதனை செய்ய அதிகாரிகளுக்கு இந்த மசோதா அனுமதி அளிக்கிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com