திண்டுக்கல் அருகே பைக்கில் சென்ற தம்பதி விபத்தில் உயிரிழப்பு

திண்டுக்கல் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதி விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்து
விபத்து
Published on

தாடிக்கொம்பு:

திண்டுக்கல் அருகே உள்ள ரெங்கப்பனூரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 35). இவரது மனைவி கருப்பாயி (32). இவர்களுக்கு மலர்கொடி (19), மணிகண்டன் (16), சந்தோஷ் (14) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர். சந்தோஷ் மட்டும் 8-ம் வகுப்பு படித்து வருகிறான். மற்ற 2 பேரும் மில் வேலைக்கு சென்று வருகின்றனர்.

கணவன், மனைவி 2 பேரும் காளவாசலில் வேலை பார்த்து வந்தனர். இன்று காலை வேலைக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் கலெக்டர் அலுவலகம் அருகே வந்து கொண்டு இருந்தனர். செங்குளம் அருகே வந்தபோது எதிரே வந்த சைக்கிளில் மோதாமல் இருப்பதற்காக திடீரென சுப்பிரமணி பிரேக் போட்டார். இதில் நிலை தடுமாறி கணவன், மனைவி கீழே விழுந்தனர். அவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இதில் படுகாயமடைந்த கருப்பாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சைக்கிளில் வந்த சத்யா நகரைச் சேர்ந்த விஜயகுமார் (45), சுப்பிரமணி ஆகியோர் படுகாயங்களுடன் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டனர். பின்னர் சுப்பிரமணி மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். விஜயகுமார் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் தாடிக்கொம்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லிடியா செல்வி சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். தாய், தந்தை 2 பேரையும் பறிகொடுத்த 3 குழந்தைகளும் கதறி அழுதது அங்கிருந்தவர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com