ஜனாதிபதி தேர்தலில் போட்டி - பீகார் கவர்னர் பதவியை ராஜினாமா செய்தார், ராம்நாத் கோவிந்த்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தேசிய முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் இதுவரை வகித்துவந்த பீகார் மாநில கவர்னர் பதவியை ராஜினாமா செய்தார்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டி - பீகார் கவர்னர் பதவியை ராஜினாமா செய்தார், ராம்நாத் கோவிந்த்
Published on

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் அடுத்த மாதம் 27-ம் தேதி நிறைவடையவுள்ளது. இதையடுத்து, புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் ஜூலை மாதம் 17-ம் தேதி நடைபெறுகிறது.

பாராளுமன்ற இரு அவைகளை சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் அனைத்து  மாநிலங்களில் உள்ள சட்டசபை உறுப்பினர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். அதிகமான வாக்குகளை பெறுபவர் உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் அடுத்த ஜனாதிபதியாக பதவி ஏற்றுக் கொள்வார்.

இந்நிலையில், மத்தியில் ஆளும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளராக பீகார் மாநில கவர்னர் ராம்நாத் கோவிந்த்(71) நிறுத்தப்பட்டுள்ளார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளை தவிர இதர மாநில கட்சிகளின் ஆதரவுடன் இவரை வெற்றிபெற வைப்பதற்கான நடவடிக்கைகளில் பிரதமர் நரேந்திர மோடியும், பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷாவும் தீவிரம் காட்டி வருகின்றனர்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட பல மாநில முதல்வர்களை தொடர்புகொண்டு அவர்கள் ஆதரவு திரட்டி வருகின்றனர்.

ஜனாதிபதி வேட்பாளராக தனது பெயர் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, இதுவரை வகித்துவந்த பீகார் மாநில கவர்னர் பதவியை ராம்நாத் கோவிந்த் இன்று ராஜினாமா செய்தார்.

அவரது ராஜினாமாவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஏற்றுகொண்டார். ராம்நாத் கோவிந்த் கவனித்துவந்த பணிகள் அனைத்தும் மேற்கு வங்காளம் மாநில கவர்னர் கேசரிநாத் திரிபாதியிடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மாளிகை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com