

புதுச்சேரி:
புதுவை காமராஜர் நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
புதுவையில் ஆளும் கட்சியான காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி சார்பில் ஜான்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
பிரதான எதிர்க்கட்சியான என்.ஆர். காங்கிரஸ் - அ.தி.மு.க. கூட்டணி சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. நேரு போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. அவர் நேற்று முன்தினம் பிரசாரத்தையும் தொடங்கினார்.
ஆனால் கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வை அழைக்காமல் பிரசாரத்தை தொடங்கிவிட்டதாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன் குற்றம்சாட்டி கண்டனம் தெரிவித்து இருந்தார். இது இரு கட்சிக்குள்ளும் பிரச்சினையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நேற்று நேரு என்.ஆர். காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ரங்கசாமியை கடுமையாக விமர்சித்து பேட்டி அளித்தார்.
அதில், ரங்கசாமி வேறு கட்சிக்கு தலையாட்டி பொம்மையாக செயல்படுகிறார். கட்சிக்குள் அ.தி.மு.க. தலையிட்டு கட்சியை வழி நடத்துகிறது என்று குற்றம் சாட்டினார்.
கட்சி தலைமையையே நேரு விமர்சித்தது கட்சிக்குள் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக நேருவுக்கு பதில் வேறு வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படி புதிய வேட்பாளரை தேர்வு செய்துள்ளனர். கட்சி பிரமுகரும், ரியல் எஸ்டேட் தொழில் அதிபருமான புவனா என்கிற புவனேஸ்வரன் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அவர் இன்று 11 மணியளவில் தேர்தல் துறையிடம் சென்று வேட்புமனு பெற்றுச் சென்றார். அதன்பிறகு பிற்பகலில் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
என்.ஆர். காங்கிரசுக்கு அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளிக்க உள்ளன. மற்றொரு கூட்டணி கட்சியான பாரதிய ஜனதா என்ன முடிவு எடுக்கப்போகிறது என்று தெரியவில்லை.
என்.ஆர். காங்கிரஸ் போட்டி குறித்து பாரதிய ஜனதாவுடன் சரியாக கலந்தாலோசிக்கவில்லை என்று கூறி பாரதிய ஜனதா கோபத்தில் இருக்கிறது. எனவே தனித்து போட்டியிடுவதாக முதலில் கூறியது. ஆனால் தற்போது மவுனம் காத்து வருகிறது. பெரும்பாலும் என்.ஆர். காங்கிரசுக்கு அந்த கட்சி ஆதரவு தருவதற்கான வாய்ப்பு உள்ளது.
முன்னாள் அமைச்சர் கண்ணன் மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் என்ற புதிய கட்சியை கடந்தவாரம் தொடங்கினார். அந்த கட்சி சார்பில் செண்பகவல்லி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார், என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரன், மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் வேட்பாளர் செண்பகவல்லி ஆகிய 3 பேரும் இன்று தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.