இடதுசாரி சிந்தனையாளர்கள் கைதுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் 5 பேர் முறையீடு

பிரதமர் மோடியை கொல்ல சதி என கூறி மனித உரிமை ஆர்வலர் கவுதம் நவலகா, இடதுசாரி சிந்தனையாளர் வரவர ராவ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதற்கு எதிராக 5 பேர் சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டுள்ளனர். #BhimaKoregaon #SudhaBharadwaj
இடதுசாரி சிந்தனையாளர்கள் கைதுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் 5 பேர் முறையீடு
Published on

புதுடெல்லி:

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மகாராஷ்டிராவின் கோரேகான்-பீமா கிராமத்தில் வன்முறை வெடித்தது. மராத்தா சமூகத்தினரும், தலித் சமூகத்தினரும் மோதிக் கொண்டனர். வன்முறையை தூண்டும்வகையில் பேசியதாக கடந்த ஜூன் மாதம் 5 பேர் கைது செய்யப்பட்டனர். 

அவர்களில் டெல்லியில் பிடிபட்ட ஒருவரிடம் கைப்பற்றப்பட்ட கடிதத்தில், “ராஜீவ் காந்தி கொலை பாணியில், பிரதமர் மோடியை கொலை செய்வோம்” என்று மாவோயிஸ்டுகள் எழுதி இருந்ததாக கூறப்பட்டது. 

அந்த கடிதத்தில், ஐதராபாத்தை சேர்ந்த இடதுசாரி எழுத்தாளர் பி.வரவர ராவின் பெயர் இருந்தது. இந்நிலையில், அவரை கைது செய்ய புனே போலீசார், நேற்று ஐதராபாத்துக்கு வந்தனர். ஐதராபாத் போலீசாரின் ஒத்துழைப்புடன், வரவர ராவின் மருமகனும், மூத்த பத்திரிகையாளருமான கே.வி.குர்மாநாத், புகைப்பட நிபுணர் கிராந்தி ஆகியோர் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

பின்னர், வரவர ராவின் வீட்டுக்கு சென்று அவரை கைது செய்தனர். அவரை ஐதராபாத் கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு, புனேவுக்கு அழைத்து சென்றனர். புனே கோர்ட்டில் இன்று அவரை ஆஜர்படுத்துகிறார்கள்.

இதுபோல், தெலுங்கானா, மராட்டியம், அரியானா, ஜார்கண்ட், டெல்லி, கோவா, சத்தீஷ்கார் என மொத்தம் 7 மாநிலங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது. அரியானா மாநிலம் பரிதாபாத்தில் நடந்த சோதனையில், இடதுசாரி சிந்தனையாளரும், வக்கீலுமான சுதா பரத்வாஜ் கைது செய்யப்பட்டார்.

மும்பையில் நடந்த சோதனையில், மாவோயிஸ்டு ஆதரவாளர்கள் வெர்னன் கோன்சல்வ்ஸ், அருண் பெரேரா, டெல்லியில் நடந்த சோதனையில் சிவில் உரிமை ஆர்வலர் கவுதம் நவலகா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள், வரலாற்று ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக ரோமிலா தபார், தேவகி ஜெய்ன் உள்ளிட்ட 5 பேர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு முன் பிற்பகல் 3.45 மணிக்கு விசாரணைக்கு வர உள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com