

கோவை:
கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி(67). இவர் பேராசிரியர் பணிநியமனத்துக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். அவருக்கு உதவியாக இருந்த வேதியியல் துறை தலைவர் பேராசிரியர் தர்மராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டார். மேலும் இவர்களுக்கு உதவிய தொலைத்தூர கல்வி இயக்குனர் மதிவாணன், துணைவேந்தரின் மனைவி சொர்ணலதா ஆகியோர் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கைது செய்யப்பட்ட துணைவேந்தர் கணபதி பதவியேற்றது முதலே பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தது. அவர் கைது செய்யப்பட்ட நிலையில் புகார் தொடர்பான ஆதாரங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் திரட்டி வருகிறார்கள்.
லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த ஒரு வாரத்தில் 3 முறை பல்கலைக்கழகத்தில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் துணைவேந்தர் அறை, பதிவாளர் அறைகளில் இருந்து முக்கிய ஆவணங்களை கைப்பற்றி எடுத்து சென்றனர். இந்த ஆவணங்களை காட்டி துணைவேந்தரிடம் விசாரணை நடத்த திட்டமிட்ட போலீசார் அவரை 5 நாள் காவலில் எடுக்க மனுதாக்கல் செய்துள்ளனர்.
இதுதொடர்பான விசாரணை நாளை மறுநாள் 12-ந்தேதி கோவை சிறப்பு கோர்ட்டில் நடக்கிறது. இதற்கிடையே துணைவேந்தர் கணபதிக்கு எதிரான ஆவணங்களை தயார் செய்வதில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
துணைவேந்தர் கணபதி 76 பேராசிரியர்கள் பணிநியமனத்தில் பல்கலைக்கழகத்தின் விதிகளை மீறி பணம் வாங்கி கொண்டு முறைகேடாக செயல்பட்டதாக அப்போதே புகார் எழுந்தது. இந்த நிலையில் பாரதியார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்று உதவி பேராசிரியர் பணிக்கான நேர்முக தேர்வில் கலந்து கொண்ட முன்னாள் மாணவர்களிடம் பல்கலைக்கழக வளாகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்களிடம் நேர்முக தேர்வை எத்தனை ஆசிரியர்கள் நடத்தினார்கள்? அவர்கள் எந்த மாதிரியான கேள்விகளை கேட்டனர்? நேர்முக தேர்வு முடிந்து பணி தொடர்பாக பேரம் பேசப்பட்டதா? என்று விசாரணை நடத்தினர். இதில் ஏராளமானபேர் கலந்து கொண்டனர்.
விசாரணையில் முன்னாள் மாணவர்கள் கொடுத்த சில தகவல்களை ஆதாரமாக லஞ்ச ஒழிப்பு போலீசார் திரட்டினர். பதவியேற்ற நாளில் இருந்தே தொடர்ந்து முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக துணைவேந்தர் மீது புகார் மட்டுமே எழுந்தது. ஆனால் அதற்கான ஆதாரங்கள் எதுவும் சிக்கவில்லை. தற்போது லஞ்சம் வாங்கிய போது வசமாக சிக்கி கொண்டதால் அவர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வலுவான ஆதாரங்களை திரட்டி வருகிறார்கள்.
பாரதியார் பல்கலைக் கழகத்தில் கடந்த 33 ஆண்டுகளில் ரூ.88 கோடி மோசடி நடந்திருப்பதாக பல்கலைக்கழக தணிக்கை துறை அடிக்கடி உயர்கல்வித்துறைக்கு புகார் அனுப்பியுள்ளனர். குறிப்பாக கடந்த 2 ஆண்டுகளில் அதிகளவில் முறைகேடுகள் நடந்து இருக்கிறது. தணிக்கை துறையின் கணக்குக்கும், செலவு கணக்குக்கும் ஏராளமான வித்தியாசங்கள் இருந்தது. இதை அவர்கள் உயர்கல்வித்துறை மற்றும் லஞ்ச ஒழிப்பு துறைக்கு ஏற்கனவே அனுப்பி வைத்திருந்தனர். ஆனால் அதுபற்றி விசாரணை நடத்தப்படாமல் இருந்தது.
தற்போது துணை வேந்தருக்கு எதிராக பல்வேறு புகார்கள் எழுந்துள்ள நிலையில் உயர்கல்வித்துறை சார்பில் இந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு பல்கலைக்கழகத்திற்கு வந்த உயர்கல்வித்துறை செயலாளர் சுனில் பாலிவாலிடம் இந்த முறைகேடு தொடர்பான ஆவணங்களை தணிக்கை துறையினர் கொடுத்துள்ளனர்.
விசாரணையில் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்ப ட்டால் முன்னாள் துணைவேந்தர்கள், அதிகாரிகளிடம் அபராதம் விதிக்கவும், அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்யவும் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. #tamilnews