திருநங்கைகளுக்கான அழகிப்போட்டியில் ‘மிஸ் கூவாகமாக’ ஆன்ட்ரியா தேர்வு

விழுப்புரத்தில் நடந்த திருநங்கைகளுக்கான அழகிப்போட்டியில் ‘மிஸ் கூவாகமாக’ தேர்வு செய்யப்பட்ட ஆன்ட்ரியாவிற்கு நடிகர் ராகவா லாரன்ஸ், கிரீடத்தை சூட்டி பரிசு வழங்கினார்.
‘மிஸ் கூவாகம்’ ஆன்ட்ரியாவிற்கு நடிகர் ராகவா லாரன்ஸ், கிரீடத்தை சூட்டி பரிசு வழங்கிய போது எடுத்த படம்.
‘மிஸ் கூவாகம்’ ஆன்ட்ரியாவிற்கு நடிகர் ராகவா லாரன்ஸ், கிரீடத்தை சூட்டி பரிசு வழங்கிய போது எடுத்த படம்.
Published on

விழுப்புரம் மாவட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 25-ந் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடந்து வருகிறது.

விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று (செவ்வாய்க்கிழமை) சாமி கண் திறத்தல் மற்றும் திருநங்கைகள் தாலி கட்டிக்கொள்ளும் நிகழ்ச்சியும், நாளை (புதன்கிழமை) தேரோட்டமும் நடக்கிறது.

இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் விழுப்புரம் மற்றும் கூவாகம் கிராமத்திற்கு வந்துள்ளனர்.

இதையொட்டி திருநங்கைகளை உற்சாகப்படுத்தும் வகையில் அவர்களுக்காக நடன நிகழ்ச்சிகள் மற்றும் ‘மிஸ் கூவாகம்’ அழகிப்போட்டி நேற்று காலை விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடந்தது. தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சிக்கு தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பின் தலைவி மோகனா தலைமை தாங்கினார். துணைத்தலைவி நூரி, செயலாளர் கங்கா, விழுப்புரம் மாவட்ட திருநங்கைகள் நலச்சங்க தலைவர் ராதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டமைப்பின் இணை செயலாளர் சுபிக்ஷா வரவேற்றார்.

இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 47 திருநங்கைகள் கலந்துகொண்டு விதவிதமான, வண்ண, வண்ண உடைகளில் மேடையில் தோன்றி ஒய்யாரமாக நடந்து வந்தனர். 3 சுற்றுகளாக நடந்த இந்த போட்டியின் முடிவில் சென்னையை சேர்ந்த ஆன்ட்ரியா ‘மிஸ் கூவாகமாக’ தேர்வு செய்யப்பட்டார். சேலத்தை சேர்ந்த கவி 2-ம் இடத்தையும், மதுரையை சேர்ந்த வர்னிதா 3-ம் இடத்தையும் பிடித்தனர்

இதனை தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் ‘மிஸ் கூவாகமாக’ தேர்வு செய்யப்பட்ட ஆன்ட்ரியாவிற்கு நடிகர் ராகவா லாரன்ஸ், கிரீடத்தை சூட்டி பரிசு வழங்கினார். 2-ம் இடத்தை பிடித்த கவி, 3-ம் இடத்தை பிடித்த வர்னிதா ஆகியோருக்கும் கிரீடம் சூட்டப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.

மிஸ் கூவாகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட சென்னை ஆன்ட்ரியா கூறும்போது, இந்த விழாவில் கலந்து கொண்டதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். அழிந்து வரும் விவசாயத்தை காக்க அனைவரும் பாடுபட வேண்டும். விவசாயி நன்றாக இருந்தால்தான் நாம் வாழ முடியும். அதனால் ஆண்களும், பெண்களும் விவசாயத்தில் ஈடுபட வேண்டும். விவசாயம் செழிக்க வேண்டும் என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com