கடற்கரை சாலையில் தாயுடன் இசை நிகழ்ச்சிக்கு சென்ற மாணவி கடத்தல்

தாயுடன் இசை நிகழ்ச்சிக்கு சென்ற மாணவி கடத்தப்பட்டதாக போலீசில் புகார் கூறப்பட்டுள்ளது.
கடற்கரை சாலையில் தாயுடன் இசை நிகழ்ச்சிக்கு சென்ற மாணவி கடத்தல்
Published on

புதுச்சேரி:

புதுவை கோவிந்தசாலை நேரு நகரை சேர்ந்தவர் பழனிவேலு. இவர் தனியார் ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தனலட்சுமி. இவரது மகள் காயத்ரி (16). இவர் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று மாலை தனலட்சுமி தனது மகள் காயத்ரியுடன் கடற்கரை சாலையில் நடந்த இசை நிகழ்ச்சிக்கு மொபட்டில் சென்றார்.

பின்னர் நிகழ்ச்சி முடிந்து இரவு 9 மணிக்கு வீட்டுக்கு செல்வதற்காக காயத்ரியை ஒரு இடத்தில் நிற்க சொல்லி விட்டு தன லட்சுமி மொபட்டை எடுத்து வர சென்றார். சிறிது நேரம் கழித்து தனலட்சுமி மொபட்டை எடுத்து கொண்டு வந்து பார்த்த போது மகளை காணாமல் தனலட்சுமி திடுக்கிட்டார். பல இடங்களில் தேடியும் எங்கும் காயத்ரி இல்லை.

இதையடுத்து தன லட்சுமி ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். புகாரில் தனது மகள் காயத்ரியை யாரோ கடத்தி சென்று விட்டதாக தெரிவித்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, நாராயணசாமி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோல் உப்பளம் நேதாஜி நகர் அழகர்சாமி கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயராமன். ஜிப்மர் ஆஸ்பத்திரியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் தாஜேஸ்வரி (23). இவர் என்ஜினீயரிங் 4-ம் ஆண்டு படித்து வருகிறார்.

சம்பவத்தன்று வீட்டில் இருந்த தாஜேஸ்வரியை திடீரென காணவில்லை. உறவினர்கள் மற்றும் தோழிகள் வீடுகள் உள்பட பல இடங்களில் தேடியும் எங்கும் தாஜேஸ்வரி இல்லை.

இதையடுத்து ஜெயராமன் தனது மகள் மாயமானது குறித்து ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com