ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிறுவனின் உணவு குழாயில் சிக்கிய பேட்டரி அகற்றம்

ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிறுவனின் உணவு குழாயில் சிக்கிய பேட்டரி வீடியோ எண்டோஸ்கோப் மூலம் அகற்றப்பட்டது.
சிறுவன் தருண் - உணவு குழாயில் சிக்கிய பட்டன் பேட்டரி
சிறுவன் தருண் - உணவு குழாயில் சிக்கிய பட்டன் பேட்டரி
Published on

ராயபுரம்:

அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் இரைப்பை, குடல் சிறப்பு அறுவை சிகிச்சை மருத்துவர்கள் தீவிர சிகிச்சையால் சிறுவனின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.

நாகை மாவட்டத்தை சேர்ந்தவர் மதியழகன். பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி தனம். இவர்களது மூத்த மகன் தருண் (வயது 10).

லேப்டாப் போன்றவற்றுக்கு பயன்படுத்தக்கூடிய பட்டன் பேட்டரியை விழுங்கி விட்டான். நாகை, தஞ்சாவூரில் உள்ள மருத்துவ மனைக்கு அழைத்து செல்லப்பட்ட சிறுவன் மேல் சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

சிறுவனின் உடலை பரிசோதித்த டாக்டர்கள் வீடியோ எண்டோஸ்கோப் மூலம் பேட்டரியை அகற்ற முடிவு செய்தனர்.

இரைப்பை, குடல் சிறப்பு அறுவை சிகிச்சை பிரிவு துறைத்தலைவர் ரவிச்சந்திரன், டாக்டர்கள் சுகுமார், ஜெஸ்வந்த், பிரபாகரன், குமுதலிங்கராஜ், அருண்ராஜ் ஆகியோர் அடங்கிய குழுவினர் பேட்டரி கருவியை வீடியோ எண்டோஸ்கோப் மூலம் அகற்றினார்கள்.

இதுகுறித்து துறைத் தலைவர் கூறும்போது, “பட்டன் பேட்டரி வயிற்றில் 48 மணி நேரத்துக்கு மேலாக இருந்தால் அதில் உள்ள கெமிக்கல் வெளியேறி உணவு குழாய் பாதித்து விடும். சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு வந்ததால் எவ்வித பாதிப்பும் இல்லாமல் உணவு குழாயில் இருந்த பேட்டரி அகற்றப்பட்டது” என்றார்.

சிறுவனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் ரூ.2 லட்சம் வரை செலவாகும். ஆனால் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிறுவனின் உயிருக்கு எந்த ஆபத்துமின்றி சிகிச்சை இலவசமாக செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com