

திருமலை:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செப்டம்பர் மாதம் 23-ந்தேதியில் இருந்து அக்டோபர் மாதம் 1-ந்தேதி வரை 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது.
பிரம்மோற்சவ விழாவின் நிறைவு நாளான அக்டோபர் 1-ந் தேதி கோவில் புஷ்கரணியில் சக்கர ஸ்நானம் (சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி) நிகழ்ச்சி நடக்கிறது. அன்று சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் புனித நீராடுவார்கள்.
பிரம்மோற்சவ விழா நடக்கும் முன்பாக கோவில் தெப்ப குளத்தில் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்வது வழக்கம். அதேபோல், இந்த ஆண்டு நடைபெற உள்ள பிரம்மோற்சவ விழாவையொட்டி தெப்பகுளம் சீரமைப்புப்பணிகள் இன்று முதல் 30-ந்தேதி வரை ஒரு மாதம் நடக்கிறது.
எனவே தெப்பகுளத்தில் பக்தர்கள் குளிக்க தடை விதித்து, அங்கு செல்லும் நுழைவு வாயில் கதவுகள் மூடப்பட்டன. தேவஸ்தான அறிவிப்பை மீறி பக்தர்கள் யாரும் தெப்ப குளத்தில் சென்று குளிக்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புஷ்கரணியின் அடியில் படிந்துள்ள சேறு, சகதிகள், குப்பைகள் அப்புறப்படுத்தப்படுகிறது. உடைந்த படிக்கட்டுகள், குழாய்கள், இரும்பு தடுப்பு வேலிகள் ஆகியவை சீரமைக்கப்பட உள்ளன. சுற்றிலும் சிவப்பு, வெள்ளை நிறத்தில் வர்ணம் பூசப்பட உள்ளது. சீரமைப்புப்பணிகள் முடிந்ததும், புனித நீர் விடப்படும் என்று திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.