வங்கி அதிகாரிகள் உடந்தையுடன் மில் அதிபர்கள் கடன் மோசடி - சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்படுமா?

வங்கி அதிகாரிகள் உடந்தையுடன் பருப்பு மில் அதிபர்கள் கடன் பெற்று மோசடி செய்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்படலாம் என தெரிகிறது.#Loancheating
வங்கி அதிகாரிகள் உடந்தையுடன் மில் அதிபர்கள் கடன் மோசடி - சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்படுமா?
Published on

விருதுநகர்:

விருதுநகரை சேர்ந்தவர்கள் வேல்முருகன் (வயது 65), செண்பகன் (55). இவர்கள் அதே பகுதியில் பருப்பு மில் நடத்தி வருகிறார்கள். இவர்கள் தங்கள் மில்லில் வேலை பார்க்கும் தொழிலாளர்களிடம் ஆயுள் காப்பீடு செய்வதாக கூறி பல ஆவணங்களில் கையெழுத்து வாங்கியுள்ளனர். மேலும் அவர்களின் ஆதார், முகவரி சான்றிதழையும் பெற்று உள்ளனர்.

இதனை பயன்படுத்தி தொழிலாளர்கள் பெயரில் தேனி மாவட்டம், தென் கரையில் உள்ள அரசுடை மையாக்கப்பட்ட வங்கியில் பல கோடி பணத்தை வேல்முருகனும், செண்பகனும் கடனாக பெற்று உள்ளனர். இதற்கு அந்த வங்கியின் அதிகாரிகளும் உடந்தையாக இருந்தாக தெரிகிறது.

இதற்கிடையில் மில்லில் வேலை பார்க்கும் சில தொழிலாளர்களுக்கு தென்கரை வங்கியில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில் வங்கியில் வாங்கிய லட்சக்கணக்கான கடனுக்கு உரிய வட்டி அல்லது அசலை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் இதுகுறித்து விசாரணை செய்தபோது மில் அதிபர்கள் தங்கள் ஆவணங்களை பயன்படுத்தி கடன் பெற்றது தெரியவந்தது.

இதுகுறித்த அவர்கள் தென்கரை போலீசில் புகார் கொடுத்தனர். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மில் அதிபர்கள் வேல்முருகன், செண்பகன் மற்றும் உடந்தையாக இருந்த கலைச்செல்வி, சோலைராஜ், சன்னாசி ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் கடன் மோசடி செய்தது தொடர்பாக விசாரணை நடத்த வங்கி அதிகாரிகளுக்கு தென்கரை போலீசார் நோட்டீஸ் அனுப்பினர். ஆனால் அவர்கள் விசாரணைக்கு ஆஜராக வில்லை.

இந்த நிலையில் தென்கரை அரசு வங்கி மேலாளர், ஊழியர்கள் என 5 பேர் இந்த வழக்கு தொடர்பாக முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த கோர்ட்டு முன்ஜாமீன் தொடர்பாக தென்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வருகிற 19-ந் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தனர்.

மில் அதிபர்கள் 2 பேரும் தொழிலாளர்களின் ஆவணங்கள் மூலம் தென்கரை உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள அரசு வங்கிகளில் கோடிக் கணக்கில் கடன் பெற்று மோசடி செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இதுகுறித்து வங்கி அதிகாரி கூறுகையில், வங்கி வாராக்கடன் மற்றும் கடன் மோசடியை தடுக்கும் வகையில் ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொதுவாக ஒரு வங்கிக் கிளையில் ரூ. 25 கோடி முதல் ரூ.50 கோடி வரை மோசடி நடைபெற்றிருப்பதாக தெரியவந்தால் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்படும் என வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை அனுப்பி உள்ளது என்றார்.

இதன்அடிப்படையில் விருதுநகர் மில் அதிபர்கள் பல கோடி மோசடி செய்திருக்க வாய்ப்பு உள்ளதால் இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்படலாம் என கூறப்படுகிறது. #Loancheating

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com