

திண்டுக்கல்:
இந்திய எல்லையில் காவல் பணியில் ஈடுபட்ட நமது ராணுவ வீரரின் தலையை துண்டித்தும், உடல்களை சிதைத்தும் கொடூரமான செயலில் ஈடுபட்ட பாகிஸ்தானின் அடாவடிச் செயலை பிரதமர் மோடி இது வரை கண்டிக்கவில்லை.
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் இதே போன்ற சம்பவம் நடந்த போது அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் வளையல்கள் அணிந்து கொள்ளட்டும் என்று ஸ்மிருதிராணி அறிக்கை விடுத்தார்.
தற்போது அதே ஸ்மிருதிராணி மத்திய அமைச்சராக பங்கு வகிக்கும் மோடி அரசின் நிலையை நாடே நகையாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மகிளா காங்கிரஸ் சார்பில் பிரதமர் மோடிக்கு வளையல்கள் அனுப்பும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் மகிளா காங்கிரஸ் சார்பாக மாநகர் மாவட்ட தலைவி ரோஜா தலைமையில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் போது மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்திய வீரரை கொன்று உடல்களை சிதைத்த பாகிஸ்தான் அரசுக்கு மோடி தகுந்த பதிலடி கொடுக்கவில்லை என்றால் மகிளா காங்கிரஸ் தொடர்ந்து வளையல்கள் அனுப்பும் போராட்டத்தை நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டது.