கலிதா ஜியா மீதான ஊழல் வழக்கில் மறு விசாரணைக்கு உத்தரவிட முடியாது: சுப்ரீம் கோர்ட் கைவிரிப்பு

வங்காளதேசம் நாட்டின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா மீதான ஊழல் வழக்கில் மறு விசாரணைக்கு உத்தரவிட முடியாது என அந்நாட்டின் சுப்ரீம் கோர்ட் இன்று மறுப்பு தெரிவித்துள்ளது.
கலிதா ஜியா மீதான ஊழல் வழக்கில் மறு விசாரணைக்கு உத்தரவிட முடியாது: சுப்ரீம் கோர்ட் கைவிரிப்பு
Published on

டாக்கா:

வங்காளதேசம் நாட்டின் பிரதமராக பதவி வகித்த கலிதா ஜியா ஆட்சிக் காலத்தின்போது அவரது பெயரால் இயங்கிவரும் அறக்கட்டளைக்காக வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக சுமார் இரண்டரை லட்சம் அமெரிக்க டாலர்கள் நன்கொடை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த குற்றச்சாட்டு தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் கலிதா ஜியா தனது பதவி அதிகாரத்தை பயன்படுத்தி மிகப் பெரிய நிதி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக, டாக்காவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.

இதற்கிடையே, கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற அந்நாட்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என கலிதா ஜியா(71) தலைமையிலான வங்காளதேசம் தேசியவாத கட்சி அறிவித்தது.

தனது பெயரிலான அறக்கட்டளை தொடர்பாக நடைபெற்ற விசாரணை முறையாக நடத்தப்படவில்லை. குவைத் நாட்டில் இருந்து வந்த நன்கொடையை சவுதி அரேபியாவில் இருந்து கிடைத்ததாக தவறாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பின்னர் வந்த ஆளும்கட்சி அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் இந்த விசாரணையை நடத்தியதால் இந்த விவகாரம் தொடர்பாக மறு விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். அதுவரை இந்த ஊழல் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என கலிதா ஜியா சார்பில் டாக்கா ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கினால் சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்த ஊழல் வழக்கின் விசாரணை தள்ளி வைக்கப்பட்டிருந்தது.

இந்த ஊழல் வழக்கில் மறு விசாரணைக்காக உத்தரவிட முகாந்திரம் இல்லை என்று கூறிய ஐகோர்ட் அந்த வழக்கை தள்ளுபடி செய்வதாக கடந்த மார்ச் மாதம் அறிவித்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கலிதா ஜியா வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி சுரேந்திர குமார் சின்ஹா தலைமையிலான நான்கு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசார்த்து வந்தது.

இந்நிலையில், இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட், கலிதா ஜியாவின் ஊழல் வழக்கில் மறு விசாரணைக்கு உத்தரவிட முடியாது என்று முன்னர் டாக்கா ஐகோர்ட் அளித்த தீர்ப்பை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த தீர்ப்பையடுத்து, அவர் மீதான ஊழல் வழக்கு விசாரணை இனி சிறப்பு நீதிமன்றத்தில் விறுவிறுப்பாக தொடர்ந்து நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com