வங்காளதேசம் தேர்தலில் ஆளும்கட்சி அபார வெற்றி - கிரிக்கெட் வீரர் எம்.பி. ஆனார்

வங்காளதேசம் தேர்தலில் ஆளும்கட்சி அபார வெற்றி பெற்றதால் ஷேக் ஹசினா மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் நிலையில் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் எம்.பி. ஆனார். #BangladeshPM #Hasinawin #Bangladeshelections
வங்காளதேசம் தேர்தலில் ஆளும்கட்சி அபார வெற்றி - கிரிக்கெட் வீரர் எம்.பி. ஆனார்
Published on

வங்காளதேசத்தில் நேற்று  பாராளுமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில், பிரதமர் ஷேக் ஹசினா தலைமையிலான அவாமி லீக் கட்சி மற்றும் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா தலைமையிலான வங்காளதேச தேசியவாத கட்சி இடம்பெற்றிருந்த கூட்டணி இடையே கடும் போட்டி நிலவியது.

மொத்தமுள்ள 300 தொகுதிகளில் 299 தொகுதிகளுக்கு நேற்று  நடைபெற்ற தேர்தலில் ஷேக் ஹசினாவின் அவாமி லீக் கட்சி 281 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதன்மூலம் மூன்றாவது முறையாக வங்காளதேச பிரதமராக ஷேக் ஹசினா ஆட்சி அமைக்கவுள்ளார்.
 

கோபால்கஞ்ச் தொகுதியில் போட்டியிட்ட ஷேக் ஹசினா 2,29,539 வாக்குகளை பெற்று அபார வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து நின்ற வேட்பாளர் வெறும் 123 வாக்குகளை வாங்கி படுதோல்வி அடைந்தார்.

எதிர்க்கட்சி தலைவரான கலிதா ஜியா ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் தேர்தலில் நிற்க அந்நாட்டு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இந்நிலையில், தேர்தலுக்கு முன்னர் நடைபெற்ற அரசியல் மோதல்களில் 13 பேரும், நேற்று வாக்குப்பதிவின்போது வெடித்த வன்முறை சம்பவங்களில் 18 பேரும் உயிரிழந்துள்ளனர். 200-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #BangladeshPM #Hasinawin #Bangladeshelections

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com