நியூசிலாந்து துப்பாக்கி சூடு- அதிர்ஷ்டவசமாக தப்பிய வங்கதேச கிரிக்கெட் வீரர்கள்

நியூசிலாந்தில் இன்று மசூதிக்குள் மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில், வங்கதேச கிரிக்கெட் அணி வீரர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். #NewZealandShooting #BangladeshCricketTeam #NZMosqueShooting
நியூசிலாந்து துப்பாக்கி சூடு- அதிர்ஷ்டவசமாக தப்பிய வங்கதேச கிரிக்கெட் வீரர்கள்
Published on

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள 2 மசூதிகளில் இன்று வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றபோது, திடீரென துப்பாக்கிகளுடன் நுழைந்த மர்ம ஆசாமிகள், தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டனர். துப்பாக்கி சத்தம் கேட்டு அனைவரும் நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. காயமடைந்தவர்களை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாக்குதல் தொடர்பாக ஒருவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் வங்கதேச கிரிக்கெட் அணி வீரர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். துப்பாக்கி சூடு நடந்த ஒரு மசூதிக்கு தொழுகை செய்வதற்காக வங்கதேச கிரிக்கெட் அணி வீரர்கள் வந்தனர். அப்போது உள்ளே துப்பாக்கி சூடு சத்தம் கேட்டதும், அவர்களை அதிகாரிகள் மற்றொரு வாசல் வழியாக வெளியே அழைத்து வந்தனர். பின்னர் வேகவேகமாக அருகில் இருந்த பூங்கா வழியாக சென்று, அவர்களின் பேருந்தில் ஏறினர். பின்னர் அவர்கள் தங்கியிருந்த ஓட்டலுக்குச் சென்றனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், துப்பாக்கி சூடு சம்பவத்தை பார்த்ததால் அதிர்ச்சி அடைந்ததாகவும் அணியின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

“கடவுள்தான் இன்று எங்களைக் காப்பாற்றினார், நாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். இதுபோன்று மீண்டும் நடக்கக்கூடாது.. எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்” என மற்றொரு வீரர் முஷ்பிகுர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.  

நியூசிலாந்து-வங்கதேச அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி நாளை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. #NewZealandShooting #BangladeshCricketTeam #NZMosqueShooting

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com