

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.போஸ் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஏற்கனவே இத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஏ.கே.போஸ் வெற்றிபெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி, எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் சரவணன் வழக்கு தொடுத்திருந்தார். இவரது கோரிக்கையை ஏற்று நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.
ஒரு முதலமைச்சரின் கைரேகையையே போலியாக பதிவு செய்தது பல கேள்விகளை எழுப்புகிறது. இத்தகைய தில்லுமுல்லு செய்தது யார் என்பதும், தேர்தல் ஆணையம் இதை எப்படி ஏற்றுக்கொண்டது என்பதும் முழுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டியதாகும்.
எனவே, தலைமை தேர்தல் ஆணையம் இத்தகைய தில்லுமுல்லுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த காலத்தில் அவரது கையொப்பத்தை போலியாக பயன்படுத்தி அரசு கோப்புகளில் வேறு ஏதும் தில்லுமுல்லுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கக் கூடும் என்ற வலுவான சந்தேகங்களை இத்தீர்ப்பு ஏற்படுத்தியுள்ளதால், இது குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.