அத்வானி, உமாபாரதி உள்பட 32 பேர் மீதான பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நாளை தீர்ப்பு

அத்வானி, ஜோஷி, உமாபாரதி உள்பட 32 பேர் மீதான பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நாளை லக்னோ கோர்ட்டு தீர்ப்பு அளிக்கிறது.
அத்வானி
அத்வானி
Published on

லக்னோ:

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி, கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந்தேதி இடிக்கப்பட்டது. தொடக்கத்தில் மாநில போலீஸ் விசாரித்த இவ்வழக்கு, பின்னர் சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.

பா.ஜனதா மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, முன்னாள் முதல்-மந்திரி கல்யாண்சிங் உள்பட 49 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர்களுக்கு எதிராக சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

17 பேர் இறந்து விட்டதால், 32 பேர் மீது வழக்கு விசாரணை நடந்தது. கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து லக்னோவில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில், சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பில் தினசரி விசாரணை நடந்து வந்தது. 350 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.

இறுதியாக, குற்றம் சாட்டப்பட்ட அத்வானி உள்ளிட்ட 32 பேரின் வாக்குமூலம் பதிவு செய்யும் பணி நடந்தது. கொரோனா காலமாக இருப்பதால், பெரும்பாலானோர் காணொலி காட்சி மூலம் ஆஜரானார்கள். தாங்கள் நிரபராதி என்றும், அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கில் சேர்க்கப்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.

இம்மாத தொடக்கத்தில் வழக்கு விசாரணை முடிவடைந்தது. தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து, இவ்வழக்கில் நாளை (புதன்கிழமை) காலை தீர்ப்பு அளிக்கப்படுகிறது. லக்னோ சி.பி.ஐ. கோர்ட்டில் நீதிபதி எஸ்.கே.யாதவ் தீர்ப்பு அளிக்கிறார். 32 பேரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி ஏற்கனவே உத்தரவிட்டு இருந்ததால், அவர்கள் ஆஜராவார்கள் என்று தெரிகிறது.

பாபர் மசூதியை இடிக்க சதித்திட்டம் தீட்டியது தொடர்பான வழக்கிலும் நாளை தீர்ப்பு அளிக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com