சென்னையில் 9-ந்தேதி முதல் 32 நாட்கள் போராட்டம்: அய்யாகண்ணு

விவசாயிகள் கோரிக்கையை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கத்தில் வருகிற 9-ந்தேதி முதல் ஜூலை 10-ந்தேதி வரை 32 நாட்கள் தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக அய்யாகண்ணு தெரிவித்துள்ளார்.
சென்னையில் 9-ந்தேதி முதல் 32 நாட்கள் போராட்டம்: அய்யாகண்ணு
Published on

தஞ்சாவூர்:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் தஞ்சை பனகல் கட்டிடம் அருகே விவசாயிகள் நேற்று உண்ணாவிரத போராட்டம் தொடங்கினர். இதில் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் உள்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டம் இன்று 2-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அய்யாகண்ணு, த.மா.கா. விவசாயிகள் அணி மாநில தலைவர் புலியூர் நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அய்யாகண்ணு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

விவசாயிகள் எவ்வளவு போராடினாலும் அவர்களை அடிமைகளாகத்தான் பார்க்கிறார்கள். தேர்தல் சமயத்தில் பொதுமக்களை முதுகெலும்பாக அரசியல்வாதிகள் நினைக்கிறார்கள். தேர்தல் முடிந்ததும் பொதுமக்களை அடிமைகளாக பார்க்கிறார்கள். டெல்லியில் விவசாயிகள் ஒருமாதத்திற்கும் மேலாக தொடர் போராட்டம் நடத்தினோம். அப்போது அங்கு வந்த முதல்-அமைச்சர் விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்தார். அதனை ஏற்று போராட்டத்தை கைவிட்டோம். ஆனால் விவசாயிகள் கோரிக்கைகள் தொடர்பாக தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே சென்னை சேப்பாக்கத்தில் வருகிற 9-ந்தேதி முதல் ஜூலை 10-ந்தேதி வரை 32 நாட்கள் தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன் தள்ளுபடி, தேசிய வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்கடன் தள்ளுபடி, கரும்பு விவசாயிகளுக்கு வட்டியுடன் நிலுவை தொகை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தொடர் போராட்டம் நடைபெறும். இதில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள், விவசாயிகள் கலந்து கொள்கிறார்கள். இந்த போராட்டத்துக்கு பிறகும் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் அதே இடத்தில் 100 நாட்கள் போராட்டம் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com