

புதுடெல்லி:
சுப்ரீம் கோர்ட்டில் அயோத்தி வழக்கு அடுத்த மாதம் 14-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஸ்ரீரவிசங்கரின் சமரச தீர்வு முயற்சி தொடர்கிறது.
அயோத்தியில் ராம ஜென்ம பூமி, பாபர் மசூதி அமைந்து இருந்த பிரச்சினைக்கு உரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு என்ற கேள்விக்கு இன்னும் இறுதி முடிவு ஏற்படவில்லை.
இது தொடர்பான வழக்குகள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது நீதிபதிகள், “இந்த மேல்முறையீட்டைப் பொறுத்தமட்டில் முற்றிலும் நில விவகாரம் மட்டும் விசாரிக்கப்படும்” என கூறினர்.
வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு 2 வார காலத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் வழக்கு தொடர்பான ஐகோர்ட்டு ஆவணங்களில் அங்கம் வகிக்கும் வீடியோ கேசட்டுகளை சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உரிய கட்டணத்தை வசூலித்து விட்டு வழங்க பதிவாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 14-ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இந்த மேல்முறையீட்டு வழக்குகளின் விசாரணையை தினந்தோறும் நடத்த வேண்டும் என்று தாங்கள் ஒருபோதும் திட்டமிடவில்லை என்று நீதிபதிகள் குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது.
இதற்கு இடையே அயோத்தி பிரச்சினையில் கோர்ட்டுக்கு வெளியே தீர்வு காணும் சமரச முயற்சியில் ‘வாழும் கலை’ அமைப்பின் நிறுவனர் ஸ்ரீரவிசங்கர் ஈடுபட்டு உள்ளார்.
பெங்களூருவில் நேற்று அவர் முஸ்லிம் தலைவர்களை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் முஸ்லிம் தனிச்சட்ட வாரிய உறுப்பினர் மவுலானா சையத் சல்மான் உசேன் நத்வி, உத்தரபிரதேச மாநில சன்னி வக்பு வாரிய தலைவர் ஜூபர் அகமது பரூக்கி, லக்னோ டீலே வாலி மஸ்ஜித்தை சேர்ந்த மவுலானா வாசிப் ஹசன், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி அனிஸ் அன்சாரி, ‘கார்டு’ அமைப்பின் இயக்குனர் அத்தர் உசேன் சித்திக், தொழில் அதிபர் ரகுமான், லண்டன் உலக இஸ்லாமிய மன்றத்தின் தலைவர் மவுலானா இசா மன்சூரி, லக்னோ வக்கீல் இம்ரான் அகமது, ஹஜ் கமிட்டியின் முன்னாள் தலைவர் அபூபக்கர், பெங்களூருவை சேர்ந்த டாக்டர் முசா கைசர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இது தொடர்பாக வாழும் கலை அமைப்பு வெளியிட்டு உள்ள அறிக்கையில், “மசூதியை வேறு ஒரு இடத்துக்கு மாற்றும் திட்டத்துக்கு அவர்கள் (முஸ்லிம் தலைவர்கள்) ஆதரவு தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட முஸ்லிம் தலைவர்கள் பலரும் இதில் ஒத்துழைப்பு அளிக்கின்றனர்” என கூறப்பட்டு உள்ளது.