

கோவை:
நதிகளை மீட்க கோரி பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஈஷா பள்ளி மாணவ- மாணவிகள் ரங்கோலி கோலமிட்டனர்.
நமது நாட்டின் உயிர் நாடியான நதிகளை காக்கும் வகையில் ‘நதிகளை மீட்போம், பாரதம் காப்போம்‘ என்ற தலைப்பில் விழிப்புணர்வு பிரசாரத்தை கோவையை அடுத்த சந்தேகவுண்டம்பாளையம் ஈஷா வித்யா பள்ளி மாணவ- மாணவிகள் தொடங்கி உள்ளனர். இதையொட்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த பள்ளி நுழைவு வாயில் முதல் தேவராயபுரம் வரை 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலையின் இருபுறமும் நேற்று மாணவ- மாணவிகள் ரங்கோலி கோலமிட்டனர். அதில் 8 வயது முதல் 16 வயதுக்கு உட்பட்ட 600-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பங்கேற்றனர். இதுமட்டுமின்றி வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மாணவ- மாணவிகள் அந்த பகுதிகளில் வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் ஆக்கிரமிப்புகளிடம் இருந்து நதிகளை மீட்பது குறித்து எடுத்துக்கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
மேலும் ஈஷா சார்பில் நதிகளை மீட்பது குறித்த விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட உள்ளது. இந்த பேரணி வருகிற 3-ந் தேதி கோவையில் தொடங்கி அக்டோபர் மாதம் 2-ந் தேதி டெல்லியில் நிறைவடையும்.
பின்னர் நதிகளின் நீரோட்டத்தை அதிகரிக்க செய்ய பல்துறை வல்லுனர்கள் நுட்பமாக உருவாக்கிய திட்ட அறிக்கை பிரதமர் மற்றும் அனைத்து மாநில முதல்வர்களிடமும் வழங்கப்படுகிறது. இந்த தகவலை ஈஷா நிர்வாகம் தெரிவித்து உள்ளது.