திருவேற்காடு பகுதியில் நூதன விழிப்புணர்வு- குப்பை கொட்டுவதை தடுக்க வண்ண கோலங்கள்

திருவேற்காட்டில் பொது இடங்களில் கொட்டப்படும் குப்பையை அகற்றி அதில் துப்புரவு பெண் ஊழியர்கள் வண்ண கோலங்கள் போட்டு வருகிறார்கள். இதனால் அந்த இடங்கள் முழுவதும் தற்போது சுத்தமாகி பளிச்சென மாறி உள்ளது.
குப்பைகள் இருந்த இடத்தில் அதனை அகற்றி கோலமிடும் நகராட்சி பெண் தொழிலாளர்கள்.
குப்பைகள் இருந்த இடத்தில் அதனை அகற்றி கோலமிடும் நகராட்சி பெண் தொழிலாளர்கள்.
Published on

பூந்தமல்லி:

திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தினமும் 23 மெட்ரிக் டன் அளவுக்கு குப்பை சேகரிக்கப்படுகிறது.

நகராட்சி பணியாளர்கள் வீடு வீடாக சென்று மக்கும் மற்றும் மக்காத குப்பையை பிரித்து சேகரித்து வருகின்றனர்.

இதுபற்றி பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நகரின் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு பதாகைகள், பேனர்கள் வைக்கப்பட்டு வருகிறது. துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டு வருகிறது.

எனினும் பொது இடங்களில் குப்பை கொட்டுவது தொடர்ந்து நடந்து வந்தது. சுந்தரசோழபுரம் மெயின் ரோடு, தேரோடும் வீதி, கோலடி மாதா கோவில் பகுதி, பாரதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் குப்பை கொட்டுவது நீடித்தது.

இதையடுத்து குப்பை கொட்டுவதை தடுக்க திருவேற்காடு நகராட்சி அதிகாரிகள் வித்தியாசமான முயற்சியை எடுத்தனர்.

அதன்படி பொது இடங்களில் கொட்டப்படும் குப்பையை அகற்றி அதில் துப்புரவு பெண் ஊழியர்கள் வண்ண கோலங்கள் போட்டு வருகிறார்கள். இதனால் அந்த இடங்கள் முழுவதும் தற்போது சுத்தமாகி பளிச்சென மாறி உள்ளது.

குப்பை கொட்டப்படுவது நிறுத்தப்படும் வரை அந்த இடங்களில் வண்ணக் கோலங்கள் போடப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இது குறித்து நகராட்சி ஆணையர் செந்தில்குமரன் கூறியதாவது:-

திருவேற்காடு நகராட்சியை தூய்மையான நகராக மாற்றுவதற்கு நகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொது மக்கள் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

திடக்கழிவு மேலாண்மை விதிகளின் படி, குப்பையை உருவாக்குபவரே குப்பைக்கு பொறுப்பு என்பதை உணர வேண்டும். குப்பையை வீடு தேடி வரும் நகராட்சி பணியாளரிடம் வழங்க வேண்டும். பொது இடங்களில் குப்பையை கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட் அருள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் குப்பை கொட்டும் பொது இடங்களை கண்டறிந்து அங்கு ஊழியர்கள் சுத்தம் செய்து வண்ண கோலங்களை போட்டு வருகின்றனர். இது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

தொடர்ந்து குப்பைகள் கொட்டப்பட்டால் அப்பகுதியில் கண்காணிப்பு கேமிரா வைக்கப்படும். அதன் மூலம் குப்பை கொட்டுவோர் அடையாளம் கண்டு பிடிக்கப்பட்டு அவர்களிடம் ரூ. 100 முதல் ரூ. 500 வரை ‘ஸ்பாட் பைன்’ வசூலிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com